சாதனைகள் படைக்கப்படுவதே அதை முறியடிப்பதற்குத்தான் என்று சொல்வார்கள். அப்படி ஒரு பிரம்மாண்டமான சாதனையை “கேஜிஎப் சாப்டர் 2” பட டீசர் வெளியான 24 மணி நேரத்தில் பெரும் சாதனை படைத்துள்ளது.
நேற்று முன்தினம் இந்த படத்தின் டீசர் யு டியூ-பில் வெளியானது. வெளியானதிலிருந்தே தொடர்ந்து பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. நேற்று இரவுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 78 மில்லியன் பார்வைகள், 4.2 மில்லியன் லைக்குகளைப் பெற்று ஒரு புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
இந்தியத் திரையுலகில் வேறு எந்த ஒரு பட டீசரும் 24 மணி நேரத்தில் இந்த அளவிற்கு பெரும் வரவேற்பைப் பெற்றதில்லை. தற்போது வரை 8 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், 4.7 மில்லியன் லைக்குகளையும் இந்த கேஜிஎப் டீசர் பெற்றுள்ளது. பட டீசரைப் பொறுத்தவரை “கேஜிஎப் 2” பட டீசர்தான் இதற்கு முன்பு வெளியான அனைத்து டீசர்களைக் காட்டிலும் தற்போது முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை வேறு எந்தத் திரைப்படத்தின் டீசர், முறியடிக்க முடியும் என்ற கேள்வி ரசிகர்களிடம் தற்போது எழுந்துள்ளது.
தென்னிந்தியத் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் தமிழ்ப் படங்களின் டீசர், டிரைலர்கள்தான் இப்படியான சாதனைகளை ஆரம்பித்து வைத்தது. அதன்பின் “பாகுபலி” டிரைலர் முந்தைய சாதனைகளை முறியடித்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்த டிரைலர் 117 மில்லியன் பார்வைகளை தன் வசம் வைத்துள்ளது. அந்த சாதனையை “கேஜிஎப் 2” டீசர் முறியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த சாதனையையும் முறியடித்து, டீசர், டிரைலர்களில் முதலிடத்தை “கேஜிஎப் 2” பட டீசர் பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஒரு சாதனை நிகழ்ந்தால், அதை முறியடிக்க ராஜமௌலி இயக்கி வரும் “ஆர்ஆர்ஆர்” பட டீசரால் மட்டுமே முடியும் என டோலிவுட் ரசிகர்கள் சொல்கிறார்கள். “கேஜிஎப் சாப்டர் 2” பாணியில் 5 மொழிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு டீசரை மட்டும் “ஆர்ஆர்ஆர்” படக்குழுவினர் வெளியிட்டால் அது சாத்தியம் ஆகலாம்.
தமிழ்ப் படங்கள் என்று பார்த்தால் வரும் மாதங்களில் அஜீத் நடிக்கும் வலிமை, ரஜினி நடிக்கும் அண்ணாத்த ஆகிய படங்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு இருக்கிறது. விஜய் 65 இன்னும் ஆரம்பிக்கவேயில்லை. எனவே, இன்னும் கொஞ்ச நாளைக்கு விஜய், அஜித் ரசிகர்கள் அவர்களது டீசர், டிரைலர், லைக்குகள் சாதனையைப் பற்றிப் பேச வாய்ப்பே இல்லை.