உலக இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படும் பலுச்சிஸ்தான் மாகாணத்தின் பெரும்பான்மை மக்கள், பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகின்றனர். பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் பலுச்சிஸ்தான் மாகாண மக்கள், பாகிஸ்தானிடம் இருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
மேலும், பாகிஸ்தான் நாட்டின் ராணுவம் இந்த மக்களை கடத்தி, கொலை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது. இதனால், பாகிஸ்தான் ராணுவத்தின் அடக்குமுறை வன்முறைக்கு எதிராக பலுச்சிஸ்தான் சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். சென்ற 15 வருடமாக நீடித்து வரும் இந்த ராணுவ ஊடுருவலை எதிர்த்து வரும் பலுச்சிஸ்தான் அரசியல் தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் அதிகளவு கொடுமையை அனுபவித்து வருகின்றனர். மேலும், பலர் அங்கிருந்து தப்பி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், பலுச்சிஸ்தானில் வசித்து வந்த பெண் ஆர்வலர் கரீமா பலூச், சுவிச்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் அடக்குமுறை வன்முறைக் குறித்து பேசினார். சென்ற 2016-ஆம் ஆண்டில் உலகின் முதல் 100 புகழ்பெற்று மிகுந்த பெண்கள் பட்டியலில் கரீமாவும் இடம்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற 2019-ஆம் ஆண்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பலுச்சிஸ்தானின் இயற்கை வளங்களை பாகிஸ்தான் திருடிக்கொண்டு, அங்குள்ள மக்களை அழித்து வருவதாக குற்றம் சுமத்தியிருந்தார். தற்போது கரீமா கனடாவில் அகதியாக வசித்து வந்த இந்நிலையில், தற்போது அவர் மாயமாகியுள்ளார். இவரை காணவில்லை என்று காவல் துறையும் தகவல் தெரிவித்து, அவரை தேடி வந்த நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மேலும், பாகிஸ்தானிற்கு எதிராக பேசிய பலுச்சிஸ்தான் மாகாணத்தை சார்ந்தவர் இறப்பது புதிதானது கிடையாது என்றும் ஊடக வட்டாரங்கள் அறிவித்துள்ளது.