கேரளா மாநிலத்தில் கன்னியாஸ்திரி கொலை செய்யப்பட்ட நீண்ட நாள் வழக்கில், 28-ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், அங்கு பணியாற்றிய மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளிகள் என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி அபயா வயது 19. இவர் அங்குள்ள செயின்ட் பயன் கான்வென்டில் தங்கியிருந்த சமயத்தில் 1992-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 27-ஆம் தேதி அங்குள்ள கிணற்றில் இறந்து கிடந்தார். அதனை விசாரித்த காவல் அதிகாரிகள், அவர் தற்கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், அவர்களும் இதனை தற்கொலை என்றே கூறினர். 2-வதாக நியமிக்கப்பட்ட சி.பி.ஐ விசாரணையில் கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்தது. 3-வது குழு விசாரித்தத்தில் இந்த கொலையை செய்தவர்கள் பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி என தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாஸ்திரி செபியும், பாதிரியார் தாமஸும் உல்லாசமாக உடல் உறவு வைத்துக்கொண்டு இருந்த காட்சியை கன்னியாஸ்திரி அபயா பார்த்துவிட்டதால், வெளியே சொல்லிவிடுவாரோ என்று பயந்துபோய், கன்னியாஸ்திரி அபயாவை கொலை செய்து கிணற்றில் வீசியது சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் மீது கொலை வழக்கு மற்றும் குற்றச்சதி, ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகளால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாதிரியார் புத்ருக்காயலுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லாததால் நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு அவரை விடுவித்தது.
மற்ற இருவர்கள் மீதும் வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.சனல் குமார் இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதில், பாதிரியார் தாமஸ் கூட்டுர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் கொலை குற்றவாளிகள் என்றும், தண்டனை விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.