இந்தியாவின் எதிரி நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா வின் இந்திய எல்லைகளை கண்காணிக்க ஏர் இந்தியாவின் ஆறு விமானங்களை, வான்வழி ரேடார் நிலையமாக மாற்ற டி.ஆர்.டி.ஓ.,வு-க்கு மத்திய அரசு ஒப்பந்தம் வழங்க உள்ளது.
இந்தியா – சீனா உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமடைந்துள்ளது. மேலும் பாகிஸ்தானுடன் சீனா மிகவும் இணக்கம் காட்டி வருகிறது. இதனால் இந்திய எல்லையில் தீவிர கண்காணிப்பு அவசியமாகிறது. அதற்காக விமானப்படையின் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு விமானத்திலிருந்தபடியே கண்காணிப்பு மற்றும் உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடிய அதிநவீன ரேடார் அமைப்பு கொண்ட விமானங்கள் அவ்சியம் தேவை.
அந்த ரேடாருக்கு வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு என்று பெயர். ஐரோப்பிய நிறுவனத்திடம் இந்த ரேடார் அமைப்பு பொருத்திய ஆறு ஏர்பஸ் 330 விமானங்களை பாதுகாப்பு அமைச்சகம் வாங்க இருந்தது. இதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இந்த நிலையில் ஏர் இந்தியாவின் விமானங்களை டி.ஆர்.டி.ஓ., மூலம் மாற்றி அமைத்து நவீன ரேடார்களை பொருத்த முடிவு செய்துள்ளது. மேலும் மேக் இன் இந்தியா மற்றும் தன்னிறைவு திட்டத்தை விளம்பரப்படுத்த இது உதவும்.
இந்த திட்டத்திற்கு ரூ.10,500 கோடி மத்திய அரசு ஒதுக்க உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே டி.ஆர்.டி.ஓ., நேத்ரா என்ற பெயரில் இந்த ரேடார் அமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது. தற்போது இப்புதிய திட்டத்தால் உள்நாட்டு பாதுகாப்புத் தொழிலுக்கு பெரிய ஊக்கம் கிடைக்கும் என்கின்றனர் அது சார்ந்த அதிகாரிகள். தற்போது உருவாக்க உள்ள ஏ.இ.டபிள்யூ&சி தொகுதி இரண்டு விமானங்கள் நேத்ரா விமானத்தை விட அதிக திறன் கொண்டவை. போர்களின் போது எதிரியின் எல்லைக்குள் 360 டிகிரியிலும் நமது விமானங்களுக்கு பெரும் பாதுகாப்பை வழங்கும்.