சமீப காலமாகவே தமிழக அமைச்சர்களில் ஒருசிலர் சர்ச்சையான செயலில் சிக்கி கொண்ட சம்பவங்கள் நாடெங்கிலும் நடந்து வருகிறது. அதில் ஒருவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். கடந்த வருடம் போலவே இந்த வருடம் 2020-லும் திண்டுக்கல்லார் செய்த ஒரு யதேச்சையான செயல், தற்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்ற பிப்ரவரி மாதம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஊட்டிக்கு சென்றிருந்தார். முதுமலையில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே அமைச்சர் அங்கு சென்றார். அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு, மீண்டும் திரும்பி வரும் வழியில் அவரை காண்பதற்காக சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். அப்போது ஒரு கோவிலுக்குள் சாமி கும்பிட அவர் செல்ல நேர்ந்தது. அதனால் அவர் அங்கு செல்ல முயன்றபோது, அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக் கொண்டது. பக்கிள்ஸ் மாட்டிய செருப்பினை அமைச்சர் சீனிவாசன் அணிந்திருந்தார்.
அவரேகுனிந்து தன்னுடைய செருப்பை கழட்டாமல், அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பழங்குடியின சிறுவனை கூப்பிட்டு கழற்றிவிடுமாறு சொன்னார். செருப்பை சிறுவன் கழட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையானது.. அன்றைய தொலைக்காட்சிகளில் இந்த காட்சிதான் எதிரொலித்து கொண்டே இருந்தது. உண்மையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ரொம்பவே வெள்ளந்தியானவர். எதையும் மனதில் வைத்து கொண்டு பேச மாட்டார். யாரையும் காயப்படுத்தியும் இதுவரை பேசியதில்லை.
அந்த சிறுவனை அழைத்து செருப்பை கழட்டிவிட சொன்னதுகூட யதார்த்தமான ஒன்று என்றாலும், அந்த சிறுவன் பழங்குடியினம் என்பதால் விஷயம் பெரிதாகிவிட்டது. தாம் சாதாரணமாக சொன்னது, இப்படி பூதாகரமாகும் என்று அமைச்சரே எதிர்பார்க்கவில்லை. நிஜமாகவே அதிர்ந்து போய்விட்டார். “அந்த பையன் எனக்கு பேரன் மாதிரி” என்று அமைச்சர் விளக்கம் சொன்னார்.. ஆனால், அதை யாருமே ஏற்கவில்லை. பல்வேறு தரப்பில் அமைச்சர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் தர ஆரம்பித்துவிட்டனர்.
ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட அந்த சிறுவனே மசினக்குடி காவல் நிலையத்தில் அமைச்சர் மீது புகார் தந்தார். அந்த புகாரில் “அமைச்சர் சொல்கிறாரே என்பதற்காகவும், உயரதிகாரிகள், காவலதிகரிகள் இருப்பதாலும்தான் நான் பயந்துகொண்டு அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டேன். இதை அங்கிருந்தோர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அங்கு வந்திருந்தவர்கள் எல்லாருமே பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள் என்பது அமைச்சர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நிலைமையை சரிசெய்ய, அந்த சிறுவனையே நேரில் அழைத்து பேசினார் திண்டுக்கல் சீனிவாசன். சிறுவனின் தாயிடமும் தன்னுடைய செயலுக்கு அமைச்சர் வருத்தம் தெரிவித்தார். அதன் பிறகு அமைச்சர் சீனிவாசன் மீது சிறுவன் தந்த புகார் வாபஸ் பெறப்பட்டுவிட்டது. இந்த வருடத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஏற்படுத்திய பரபரப்பில் இது மிக முக்கியமான ஒன்றாகும்.