கொரோனா வைரசின் கோரமான 2 ஆம் அலை காரணமாக பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதாக ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) தெரிவித்துள்ளது. உலகத்தின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிவேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
இதனால், மீண்டும் பொதுமுடக்கம், வெளிநாட்டு பயணிகள் கட்டுப்பாடு உள்ளிட்டவைகளை சிலபல நாடுகள் பின்பற்றி வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதி வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் கோரமான இரண்டாம் அலை அதி வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் ஊரடங்கு நடவடிக்கைகளை கடுமையாக்கி வருகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரசின் 2 ஆம் அலை காரணமாக பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 11 நாடுகளை சார்ந்த மக்களுக்கு விசா(அயல்நாட்டு நுழைவுச்சான்று) வழங்குவதை நிறுத்துவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தான், துருக்கி, ஈரான், ஏமன், சிரியா, ஈராக், சோமாலியா, லிபியா, கென்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த மக்களுக்கு விசா(அயல்நாட்டு நுழைவுச்சான்று) வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.