சூரரைப்போற்று | சினிமா திரைவிமர்சனம் |
---|---|
கதாநாயகன் | நடிகர் சூர்யா |
கதாநாயகி | நடிகை அபர்ணா பாலமுரளி |
இயக்குனர | சுதா கோங்கரா பிரசாத் |
இசை | ஜி.வி.பிரகாஷ் குமார் |
ஓளிப்பதிவு | நிகேத் பொம்மிரெட்டி |
தமிழக்த்தின் மதுரை சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் சூர்யா. வாத்தியாராக இருக்கும் இவரது அப்பா பூ ராமு, சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வேண்டி மனு எழுதிய அகிம்சை வழியில் போராடி வருகிறார். இது பலன் அளிக்காததால் போராட்டத்தில் இறங்குகிறார் சூர்யா. இதனால் தந்தை பூ ராமுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.
வீட்டை விட்டு பிரிந்து செல்லும் சூர்யா, ஏர்போர்ஸ் சர்வீசில் பணிக்கு சேருகிறார். ஒரு கட்டத்தில் சூர்யா தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அதிக பணம் இல்லாததால் விமானத்தில் வர முடியாமல் போகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வர முடியாததால் அவரது தந்தை இறந்த இறுதிச் சடங்கில் கூட அவரால் கலந்து கொள்ள முடிய வில்லை.
இதனால் விரக்தி அடையும் சூர்யா, பணக்காரர்கள் மட்டும் பறக்கும் விமானத்தில் தன்னைப் போன்று இருக்கும் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், விமானத்தில் பறப்பதை பெருங்கனவாகக் கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் கனவை நிறைவேற்ற, குறைந்த பயண செலவில் விமான சேவை தொடங்க முயற்சி செய்கிறார். இதில் பல இன்னல்கள், கஷ்டங்கள், துன்பங்கள், பலரின் சூழ்ச்சி, நிறுவனங்களின் தலையீடு என சூர்யாவிற்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதிலிருந்து மீண்டு இறுதியில் குறைந்த விலையில் விமான சேவையை சூர்யா தொடங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் நடிகர் சூர்யாவை முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். கோபம், விரக்தி, வெறுப்பு, இயலாமை, வலி என நடிப்பில் தடம் பதித்திருக்கிறார். தந்தையை பார்க்க வர வேண்டும் என்பதற்காக விமான நிலையத்தில் பணம் கேட்கும் காட்சியில் இவரின் நடிப்பு அபாரம்.
ஊருக்கு வந்தவுடன் தாயை சந்திக்கும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். ஏர்போர்ஸ் ஆபிசராக இருக்கும் போது கம்பீரமாகவும், காதல் மனைவியுடன் இருக்கும்போது புத்துணர்ச்சியாகும் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி, தன் முதல் சினிமா படம் என்று தெரியாத அளவிற்கு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சூர்யாவுக்கு போடும் ஆணைகள், அவருடன் சண்டை போடும் காட்சி, நடனம், முகபாவம் என அவருடைய அனைத்தையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
தந்தையாக வரும் பூ ராமு படம் பார்க்கும் அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறார். தாயாக வரும் ஊர்வசி, சூர்யா ஊருக்கு வந்தவுடன் நடக்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார். மேலும் ஊர் மக்கள் உனக்கு துணையாக இருக்கிறார்கள் எப்படியாவது ஜெயித்து விடுடா மகனே என்று சொல்லும்போது கைத்தட்டல் பெறுகிறார். கருணாஸ், காளி வெங்கட் ஆகியோர் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவின் கரநாடக மாநிலத்தை சேர்ந்த ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியும், அவர் எழுதிய “சிம்பிள் ஃப்ளை” என்ற நாவல் நூலை அடிப்படையாகக் கொண்டும் “சூரரைப் போற்று” படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. “இறுதிச்சுற்று” படத்துக்குப் பிறகு வேறொரு அருமையான கதை தளத்தில் படத்தை தமிழில் கொடுத்து இருக்கிறார். அவருடைய கதாப்பாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் மிகவும் அருமை.
அதுபோல் ”ரத்தன் டாடாவாலேயே இங்கே ஒரு ஏர்லைன் ஆரம்பிக்க முடியலை”. ”நீங்க யார் மாறன், உனக்குல்லாம் எதுக்குய்யா பெரிய மனுஷங்க பண்ற பிசினஸ் என்ற வசனமும் அதை காட்சிப்படுத்திய விதமும் மிகச்சிறப்பு. படத்தில் நிறைய ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தாலும், ராணுவப் பயிற்சி மையத்தில் விமானத்தை அத்துமீறித் தரையிறக்க முடியுமா. குடியரசு தலைவரை அவ்வளவு எளிதாக பார்க்க முடியுமா.. என்ற கேள்விகள் எழுந்தாலும் அது பெரிய குறையாக படம் பார்பவர்களுக்கு தோன்றவில்லை. இளம் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பெரிய ஒரு பலம்.
சூரரைப்போற்று படத்தின் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக அமைந்திருக்கிறது. பாடல்கள் தனியாக இல்லாமல் கதையோடு பயணித்து இருப்பது சினிமா ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது. கேமராமென் கேத் பொம்மியின் கேமரா, படத்தில் மேஜிக் நிகழ்த்தியுள்ளது என்றே கூறலாம். மொத்தத்தில் “சூரரைப்போற்று” ஓடிடி உள்ள அனைவரது வீடுகளிலும் சூரசம்காரம்தான்.
0 comment
Visitor Rating: 5 Stars
Visitor Rating: 3 Stars
Visitor Rating: 4 Stars