ஒரு சினிமா படத்தில் வரும், நடிகர் வடிவேலுவின், “கிணத்தை காணோம்” என்கிற காமெடியை போல், பயிரிட்டு வந்த நிலத்தை காணவில்லை என, சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், கண்ணீருடன் புலம்பி வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சித்தாலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் யுவராஜ் வயது 36. விவசாயி. அந்த பகுதி ஏரிக்கு அருகே, யுவராஜுக்கு சொந்தமான, 35 சென்ட் பட்டா நிலம் உள்ள. ஏரி பாசன பகுதி நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், இவரது நிலத்திற்கு அருகே உள்ள, நீர்நிலை புறம்போக்கு நிலத்தில், பொதுக்குளம் அமைக்க, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தீர்மானித்தது. இதற்காக, 2019 – 2020 ஆம் ஆண்டுக்கான மாநில நிதிக்குழு மானியத்தில், 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன், இதற்கான பணி துவங்கப்பட்டு, குளம் எடுத்தல் பணி, நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், தனக்குச் சொந்தமான, 15 சென்ட் பட்டா நிலத்தில், அதிகாரிகள் குளம் அமைத்து விட்டதாக, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து, புலம்பி வருகிறார்.இது குறித்து, விவசாயி யுவராஜ் கூறியதாவது, உடல் நலம் சரியில்லாத காரணத்தால், சென்ற மாதம், சென்னையில் தங்கி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றேன்.
சில தினங்களுக்கு முன் ஊர் திரும்பியபோது, எனக்குச் சொந்தமான விவசாய நிலம், பொதுக்குளமாக மாற்றப்பட்டு உள்ளது. சுற்றிலும் உள்ள புறம்போக்கு இடத்தை விட்டு விட்டு, என்னுடைய பட்டா நிலத்தை ஆக்கிரமித்து, அதிகாரிகள் குளமாக்கி உள்ளனர். நில அளவையரை வைத்து அளவீடு செய்ததில், என் நிலத்தின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்து, குளம் அமைத்தது தெரிந்தது. எனக்கு, வேறு நிலம் ஏதும் இல்லை. எனவே, பொதுக்குளமாக மாற்றப்பட்டுள்ள என்னுடைய நிலத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.