மனிதனின் உடலிலிருந்து வெளியேறும் தேவையில்லாத ஒரு திரவ பொருளாகக் கருதப்படும் சிறுநீர் இருந்தால் நிலவிற்குள் கட்டுமானப்பணிகளை மிக எளிதாக முடித்துவிடலாம் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
மனிதனின் சிறுநீரை, எதிர்காலங்களில் சந்திரனில் கான்கிரீட் உருவாக்க பயன்படுத்தலாம் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காகப் பல ஆராய்ச்சிகள் இப்போது நடந்து வருகிறது. நிலவில் மனிதர்களின் உறைவிடத்திற்காக இட வசதி, உணவு பதப்படுத்துதல் போன்ற பலவிதமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக விண்வெளி வீரர்களுக்குத் தேவைப்படும் பொருள்களைப் பூமியிலிருந்து எடுத்துச் செல்வதற்கான தேவையைக் குறைக்கப் பல அறிவியல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சந்திரனில் கட்டுமானங்களுக்கான கான்கிரீட் பொருள்களை விண்வெளி வீரர்களின் சிறுநீரிலிருந்து தயார் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. அதற்கான சாத்தியம் மனிதனின் சிறுநீரில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதன்படி நிலவில் கான்கிரீட் உருவாக்கப் பூமியிலிருந்து பொருட்களை எடுத்துச்செல்வதற்கான செலவையும், நேரத்தையும், இந்த பரிசோதனை முறை பெரிதும் குறைக்க உதவும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதனின் சிறுநீரில் உள்ள முக்கிய கரிம சேர்மமான யூரியா, சந்திரனின் மணலுடன் சேரும் போது அதன் உறுதியான இறுதி வடிவத்தில் கடினமாவதற்கு முன்பு கான்கிரீட் கலவையை மிகவும் இணக்கமாக மாற்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது. சந்திரனின் மணலில் மற்ற திரவப்பொருட்களை விடவும் மனிதனின் சிறுநீர் உறுதியான வெளிப்பாட்டை கொண்டுள்ளது. நிலவின் தளத்தில் அங்கேயே கிடைக்கக்கூடிய பொரருள்களை வைத்து கட்டுமானபணி நடத்தப்பட்டால் இன்னும் அங்கு விரைவாகக் கட்டுமான வேலையை முடிக்கமுடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. முடிந்தவரை பூமியிலிருந்து பொருட்களை எடுத்த செல்லாமல் இருக்க பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிலவில் கட்டுமானப்பணிக்காக உருவாக்கப்படும் “சந்திர கான்கிரீட்” – ன் முக்கிய மூலப்பொருள் நிலவின் மேற்பரப்பில் கிடைக்கும் சந்திர ரெகோலித் எனப்படும் ஒரு வகை மணல் தூள் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ரஜன் பிணைப்புகளை உடைத்து, திரவ கலவைகளின் பாகுத்தன்மையைக் குறைக்க மனிதனின் சிறுநீரில் உள்ள யூரியா உதவுகிறது, இந்த அறிவியல் செய்முறை நிச்சயமாக நிலவில் தேவைப்படும் நீரின் அளவைக் குறைக்கும் என்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
பொதுவாக ஒரு மனித உடல் ஒவ்வொரு நாளும் சுமார் 1.5 லிட்டர் சிறுநீர் கழிவுகளை உருவாக்குகிறது. இதனால் வருங்கால மக்களின் சிறுநீரை சேகரித்து அதை விண்வெளி ஆய்வுக்கான ஒரு நல்ல தயாரிப்பு பொருளாகப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூமியில், யூரியா பொருள், தொழில்துறை உரமாகவும், ரசாயன மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கான மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நிலவில் தாவரம் வளர்ப்பது, செயற்கைமுறையில் ஆக்சிஜன் உருவாக்குவது, தண்ணீர் உருவாக்குவது போன்று பல ஆராய்ச்சிகளையும் ஆராய்ச்சியளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.