நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை, ஒரே தேர்தல், ஒரே பாடத்திட்டம் என்ற வரிசையில் தற்போது ஒரே வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு என தனித்தனி வாக்காளர் பட்டியலை பயன்படுத்துவதற்கு பதிலாக நாடு முழுவதும் அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரதமர் அலுவலகம், உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை ஏற்படுத்தி நடத்தி உள்ளது.
“ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற திட்டத்தின் கீழ், மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பதில் மத்திய பாஜ அரசு உறுதியாக உள்ளது. இதன் மூலம், அரசுக்கு ஏற்படும் பல ஆயிரம் கோடி செலவுகள் மிச்சமாகும் என்றும், இராணுவம், அரசு ஊழியர்கள் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும் சிறமம் குறையும் என்றும் மத்திய அரசு சொல்லி வருகிறது. மேலும், அதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்தும் வருகின்றன. இத்திட்டத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில், நாடு முழுவதும் ஒரே வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதற்கான ஆலோசனைகள் ஆரம்பித்துள்ளன.
தற்சமயம், மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தயாரிக்கிறது. மாநில தேர்தல் ஆணையங்கள், உள்ளாட்சி தேர்தலுக்காக, தனியாக வாக்காளர் பட்டியலை தயாரித்து வெளியிடுகின்றன. அரசியலமைப்பு சட்டத்தின்படி, உள்ளாட்சி தேர்தல்களுக்கு சொந்த தேர்தல் பட்டியலை தயாரிக்க மாநில தேர்தல் ஆணையங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்டியலை தலைமை தேர்தல் ஆணையத்துடன் ஒருங்கிணைக்க வேண்டியதில்லை. ஒரே தேர்தல் ஒரே வாக்காளர் பட்டியல் திட்டத்தின்படி, மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்த அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இம்மாத துவக்கத்தில் பிரதமர் அலுவலகம் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. சட்ட அமைச்சகம், தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான தனி வாக்காளர் பட்டியலை தயாரிப்பதை நீக்க, அரசியலமைப்பு சட்டம் 243 கே மற்றும் 243 இசட்ஏ ஆகிய பிரிவுகளில் திருத்தம் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், தற்போது ஒரே பணிக்காக இருமுறை செலவிடப்படுகிறது. அனைத்து தேர்தலுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் பயன்படுத்துவதன் மூலம் பணசெலவு மிச்சமாகும். ஒரே பணியை திரும்ப திரும்ப செய்வதும் தவிர்க்கப்படும் என்றனர். இது குறித்து ஒரு மாதத்தில் மாநில அரசுகளுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உயர்மட்ட குழுவில் முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கிய முக்கிய அரசியல் தந்திரமாக, இந்த ஒரே வாக்காளர் பட்டியல் திட்டம் கருதப்பட்டாலும், அதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இந்த இரண்டு விஷயங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு முந்தைய காலகட்டங்களில், தேர்தல் ஆணையமும், சட்ட கமிஷனும் நாடாளுமன்ற நிலைக்குழுவும் ஒரே வாக்காளர் பட்டியலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு, ஒரே வாக்காளர் பட்டியல் என்பது பாஜக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். மக்களவை, சட்டப்பேரவை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் பாஜக-வின் கொள்கை முடிவோடு இத்திட்டம் ஒத்துப் போகிறது. டிஜிட்டல் வசதிகள் வந்து விட்ட இந்நிலையில், தவறுகள் இல்லாத ஒரே வாக்காளர் பட்டியல் சாத்தியமே என தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. 1999லேயே ஆதரித்த தேர்தல் ஆணையம்: கடந்த 1999ம் ஆண்டில் தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு அனுப்பிய பரிந்துரை கடிதத்தில், தலைமை தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் தனித்தனி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதால், வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படுவது மட்டுமின்றி, ஒவ்வொன்றிலும் சிலரது பெயர்கள் விடுபட்டு போகின்றன. இதனால், ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியதோடு, தேவையற்ற பண செலவுகளும் ஏற்படுகின்றன, என குறிப்பிட்டுள்ளது. சட்ட அமைச்சகம் தனது 2016-17 மானிய கோரிக்கையில், தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் வாக்காளர் அடையாள அட்டையை புதுப்பிப்பதாலும் கூட, இரு பட்டியலின் வாக்காளர் எண்ணிக்கையிலும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.