சென்னையில் பிரபல தனியார் கல்லூரியில் பயிலும் மாணவியும், ஓர் இன்ஜீனியரும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களின் காதலில் விரிசல் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த இன்ஜினீயர், மாணவியைப் பழிவாங்க அவரை ஆபாசமாக ஃபேஸ்புக்கில் படம் சித்திரித்தாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை, அம்பத்தூர் ஓரகடம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட தெருவில் குடியிருக்கும் பெண்களுக்கு 24 மணி நேரமும் ஆபாச போன் அழைப்புகள் வந்தன. அதிகாலை முதல் இரவு வரை இந்த அழைப்புகளால் அந்த பெண்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் தங்களுக்குள் ரகசியமாக வைத்திருந்த தொலைபேசி அழைப்பு தகவல், ஒருகட்டத்தில் வெளியில் தெரியவந்தது. இது குறித்து அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி அணையிட்டார்.
அதன்பேரில் அம்பத்தூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி விசாரிதுவந்தார். சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியையும் அம்பத்தூர் போலீஸார் நாடியுள்ளனர். பாதிக்கப்பட்ட ஓரகடம் பகுதிப் பெண்களுக்கு தொலைபேசி அழைப்புவிடுத்து ஆபாசமாகப் பேசியவர்கள், உங்களின் செல்போன் நம்பர்கள் குறிப்பிட்ட முகநூலில் இருக்கின்ற’ என்றும் தெரிவித்திருந்தனர். அந்தத் தகவலையும் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களின் புகாரில் குறிப்பிட்டிருந்தனர். அதனால் சம்பந்தப்பட்ட முகநூல் கணக்கை போலீஸார் ஆய்வு செய்தனர். அந்த முகநூல் கணக்கு ஓரகடம் பகுதியில் குடியிருக்கும் கல்லூரி மாணவி ஒருவரின் பெயரில் போலியாகத் தொடங்கப்பட்டிருந்தது. அதில் மாணவி குறித்த விவரங்களும், அந்தப் பகுதியைச் சேர்ந்த சில பெண்களின் செல்போன் நம்பர்கள், சித்திரிக்கப்பட்ட புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது குறித்து தகவலறிந்த கல்லூரி மாணவியும் அவரின் குடும்பத்தினரும் பேர் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும், அந்தப் பகுதியிலுள்ள பெண்களின் செல்போன் நம்பர்கள் எப்படி அந்தப் முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது என போலீஸார் விசாரித்தனர். சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியிடம் அம்பத்தூர் மகளிர் போலீஸார் விசாரித்தனர். அப்போது மாணவி அளித்த தகவலின்படி, ஓரகடம் பகுதியில் குடியிருக்கும் இன்ஜினீயர் ஒருவர்மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை போனது. இதற்கிடையில் சைபர் க்ரைம் காவல் அதிகாரிகள், முகநூல் கணக்கு தொடங்கப்பட்ட கம்ப்யூட்டரின் ஐபி முகவரி உள்ளிட்ட விவரங்களை அம்பத்தூர் காவல் அதிகரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து அம்பத்தூர் மகளிர் காவலர்கள், மாணவியின் பெயரில் போலியாக முகநூல் கணக்கைத் தொடங்கிய இன்ஜினீயர் மகாதேவனிடம் விசாரித்துள்ளனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் காவல் உயரதிகாரி ஒருவர் கூறியபோது, “இன்ஜினீயர் மகாதேவனின் சொந்த ஊர் தேனி. இவரின் தந்தை இறந்துவிட்டார். அம்மா, அக்காளுடன் சென்னை அம்பத்தூர் ஓரகடம், காஞ்சிநகரில் குடியிருந்துவருகிறார். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ள மகாதேவன் (24), ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இன்ஜினீயர் மகாதேவனும், அதே பகுதியில் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரும் கடந்த இரண்டு வருடங்களாகக் காதலித்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் மாணவி, மகாதேவனுடன் பேசுவதைத் தவிர்த்து வந்திருக்கிறார். தன் காதலியிடம் பேசாமல் தவித்த மகாதேவன், பல தடவை அவருடன் பேச முயன்றிருக்கிறார். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. அதனால் ஆத்திரமடைந்த இன்ஜினீயர் மகாதேவன், கல்லூரி மாணவியின் பெயரில் போலியாக முகநூல் கணக்கு ஒன்றைத் ஆரம்பித்துள்ளார். பின்னர் அதில் மாணவி மட்டுமல்லாமல், அவரின் குடும்பத்தினர், மாணவி குடியிருக்கும் தெருவிலுள்ள பெண்களின் செல்போன் நம்பர்களை அதில் பதிவு செய்துள்ளார். மாணவி மற்றும் பெண்கள் குறித்த தவறான தகவல்களை அதில் குறிப்பிட்டிருக்கிறார். அதைப் பார்த்த சபல புத்திகொண்ட சில ஆண்கள் கைபேசி வழியாக ஆபாசமாகப் பேசியுள்ளனர். இன்ஜினீயர் மகாதேவனின் இந்தச் செயலால் ஓரகடம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாசமான போன் அழைப்புகள் போனது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.