தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, ஜெயராஜ் மற்றும் மகன், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
சாத்தான்குளத்தில் சென்ற ஜூன் மாதம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சில தினங்களில் இறந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துறை சில உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு காரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சையில் இருந்த அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேபோல விசாரணை கைதிகள் இரண்டு பேருக்கும் பாதிப்பு உறுதியான நிலையில், இப்போது கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை உயிரிழந்துள்ளார்.