லெபனானில் நேற்று வாயு கிடங்கு ஒன்றில் அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டது உலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லெபனான் நாட்டில் இருக்கும் பெய்ரூட் துறைமுகத்திற்கு அருகே நேற்று பெரிய வாயு கிடங்கு ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டது. இந்திய நேரப்படி முந்திய நாள் இரவு 10.30 மணிக்கு அடுத்தடுத்து இரு பெரும் வெடிப்புகள் ஏற்பட்டது. இதில் குறைந்தளவு 100 பேர் பலியாகி உள்ளனர்.
மொத்தம் 4000 பேர் இந்த பெரும் வெடிப்பில் படுகாயம் அடைந்துள்ளனர். அங்கு சுமார் 20 கிமீ பகுதியில் இருந்த அனைத்து மிக உயர்ந்த கட்டிடங்களும் இந்த வெடிப்பு காரணமாக தரைமட்டமாக சுக்குநூறாகி உள்ளது. வானுயர கட்டிடங்கள், துறைமுகங்கள் என்று எல்லாம் மொத்தமாக தரைமட்டமாகி உள்ளது.
அங்கு முதல் வெடிப்பு, அந்த குறிப்பிட்ட வாயு கிடங்கில் 10.30 மணி அளவில் இந்திய நேரப்படி முந்தாநாள் இரவு ஏற்பட்டது. விமானம் ஒன்று தாழ்வாக பறந்தால் எப்படி சத்தம் கேட்குமோ அப்படித்தான் சத்தம் கேட்டது என்று அங்கு சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் கூறியுள்ளனர். ஆனால் போக போக புகை வந்ததும்தான் மக்கள் வெளியே சென்று வாயுகிடங்கு வெடிப்பை பார்த்து உள்ளனர். அதை தங்கள் கைபேசியில் வீடியோவாக பதிவு செய்து உள்ளனர்.
இந்த வீடியோ பதிவு செய்து கொண்டு இருந்த வேளையிலேயே அடுத்த வெடிப்பு ஏற்பட்டது. முதல் விபத்தின் புகை சிவப்பு நிறத்தில் வந்த போதே அடுத்த விபத்து ஏற்பட போகிறது என்று பலரும் கணித்து இருந்தனர். அதேபோல் முதல் வெடிப்பில் இருந்து சரியாக 28 நொடிகளுக்கு பிறகு இரண்டாவது வெடிப்பு ஏற்பட்டது. இதில் இந்த இரண்டாவது வெடிப்புதான் மிக மோசமானதாக இருந்தது. இதுதான் மிகபெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் வெடிப்பு முடிந்து உள்ளே தீ எரிந்துகொண்டு இருந்தது. இந்த தீ காரணமாக இரண்டாவது வெடிப்பு ஏற்பட்டதாக அறிவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இரண்டாவது வெடிப்பிற்கு அங்கு இருந்த அம்மோனியா நைட்ரேட் வெடித்ததுதான் முக்கிய காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த வெடிப்பு காரணமாக சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு உட்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் இடிந்துள்ளது. மேலும் நில அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இந்த வெடிவிபத்து காரணமாக நைட்ரஜன் ஆக்சைட் மற்றும் அம்மோனியா விஷ வாயுக்கள் வெளியாகி உள்ளது. இந்த வாயுக்கள் மொத்தம் சுமார் 200 கிமீ தூரம் வரை பரவி இருக்கிறது. சிரியாவில் கூட இந்த வாயுக்கள் பரவி உள்ளது. அதேபோல் இஸ்ரேலுக்கும் இந்த வாயுக்கள் சென்றுள்ளது. ஆனால் இதனால் மக்கள் யாராவது மரணம் அடைந்தனரா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
அதேபோல் இந்த விபத்து ஏற்பட்ட இடத்தில் 25 அடிக்கு ஆழ பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாதாரண விபத்து ஏற்பட்டால் இப்படி பள்ளம் ஏற்படாது. அதையும் மீறி இவ்வளவு பெரிய பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு பின் வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். 100 கிமீ தூரத்திற்கு அதிகமாக இதனால் அதிர்வலைகள் எனப்படும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதில் இன்னும் நீடிக்கும் மர்மம், அது விபத்துக்கான காரணம்தான். அம்மோனியா நைட்ரேட் வெடித்துள்ளது. ஆனால் அது எப்படி வெடித்தது என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை. அங்கு சென்று முதல் கட்ட ஆராய்ச்சி நடத்திய அறிவியல் ஆராய்ச்சி வல்லுனர்கள் குழுவும் எப்படி விபத்து நடந்தது, என்று தெரியாது அவர்கள் கையை விரித்துவிட்டனர். இதனால் இந்த வெடிப்பிற்கான உண்மையான காரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.