தமிழில் முன்னாள் கதாநாயகி நடிகை குஷ்பு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் அவர் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தபோது திடீரென முக ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ராகுல்காந்தியின் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைவராக மாறிய குஷ்பு, சமூக வலைதளங்களிலும் பாஜகவின் கொள்கைகளையும் அவர்களது திட்டங்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். ஆனால் இப்போது சமீப காலமாக பாஜக அரசைப் பாராட்டும் விதமாக தனது சமூகவலைதள பக்கங்களில் பல செய்திகளை கருத்தாக வெளியிட்டு வருகிறார்.
ராமர் கோவில் அடிக்கல் நட்டும் விழாவுக்கு கூட வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று சமூகவலைதளத்தில் ஒரு கைபேசி எண்ணைப் பகிர்ந்து அந்த எணுக்குரிய நபர் தனக்கு கைபேசி வாயிலாக தொடர் மிரட்டல் விடுப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அந்த நபர் நான் முஸ்லிம் என்பதாலேயே வல்லுறவு செய்யப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளதாக நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் பிரதமர் நரேந்திரமோடியை டேக் செய்து இதுதான் ராமனின் பூமியா என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.