இராமர் கோவில் இராம ஜென்ம பூமி வரலாறு பற்றி எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு கீழே 2000 அடி ஆழத்தில் “டைம் கேப்சூல்” புதைக்கப்படும் என ஸ்ரீ இராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த டைம் கேப்சூல் புதைக்கப்படுவதால் எதிர்காலத்தில் ராம ஜென்ம பூமி குறித்து எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது. முக்கியமான தகவல்களை எதிர்காலத் தேவைக்காக பாதுகாப்பதே டைம் கேப்சூல். தற்கால நிகழ்வுகள் தகவல்கள் வரலாற்று குறிப்புகள் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை எதிர்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் எளிதில் உடையாத மிக வலிமையான குடுவைக்குள் வைத்து புதைத்து விடுவார்கள். இதன் மூலம் நிகழ்கால தகவல்களை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள இயலும்.
2019 ஆம் ஆண்டில் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் 2.77 ஏக்கர் நிலத்தில் இராமர் கோவில் கட்ட அனுமதித்து மூன்று மாதத்திற்குள் கோவில் கட்டுவதற்குரிய அறக்கட்டளையையும் மத்திய அரசு அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கு இராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு ஏற்படுத்தியது. அயோத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பூமி பூஜை நடக்கவுள்ளது.