தமிழ் நாட்டில் டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தில் இசை அமைத்து உலகப் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை யாத்திரை அன்று முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட் எனப் பல மொழிகளில் பல படங்களுக்கு தன் தனித்துவமான இசையை இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்தியாவில் இசை மற்றும் திரைத்துறையில் வழங்கப்படும் பல்வேறு விருதுகள் மட்டுமல்லாது இந்தியாவிலிருந்து சென்று ஆஸ்கார் வென்ற இசைக்கலைஞர் என்ற பெருமை பெற்றவர். இந்த நிலையில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் தயாரான “தில் பெச்சாரா” படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதற்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் குறித்து தனியார் ரேடியோ சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஹ்மான்,
பாலிவுட்டில் தன்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகப் பேசியுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் இருக்கும் வாரிசுகள் தொடர்பான சர்ச்சை பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதனுடன் தற்போது ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்தும் சேர்ந்துள்ளதால் தற்போது பாலிவுட் சினிமா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மெலும் தனியார் ரேடியோ நிகழ்ச்சியில் பேசியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், நான் நல்ல திரைப்படங்களை எப்போதும் வேண்டாம் என்று சொல்வதில்லை. ஆனால், பாலிவுட்டில் எனக்கு எதிராக ஒரு கும்பல் இருப்பதாக நினைக்கிறேன். என்னுடன் சில கருத்து வேறுபாடு கொண்ட அவர்கள் தவறான வதந்திகளைப் பரப்புகிறார்கள்.
“தில் பெச்சாரா” இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தபோது இரண்டு நாள்களில் அவருக்கு 4 பாடல்களை நான் முடித்துக் கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், “ஏ.ஆர். சார் உங்களைப் பற்றி பலர் பல தவறான கதைகள் சொல்கிறார்கள், ஏதேதோ பேசுகிறார்கள். உங்களிடம் செல்ல வேண்டாம் எனறு என்னைத் தடுத்தனர் என்று கூறினார்”.
அதைக் கேட்டபோதுதான் எனக்குப் புரிந்தது நான் ஏன் பாலிவுட்டில், குறைந்த அளவிலான படங்களைச் செய்கிறேன் என்று?, ஏன் நல்ல படங்கள் என்னிடம் வரவில்லை என்று?. ஏனென்றால், அங்கு இருக்கும் ஒரு சில கும்பல் எனக்கு எதிராகத் கேடு செய்கிறது. நான் சில விஷயங்களைச் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதைத் தடுப்பதற்கும் எனக்கு எதிரான கும்பல் உள்ளது.
இதை நான் நல்லதாகவே நினைக்கிறேன். நான் விதியை நம்புகிறவன். எல்லாம் இறைவனிடமிருந்து வருகிறது என நினைப்பவன். அதனால் எனக்கு வரும் படங்களில் நான் பணியாற்றுகிறேன். நல்ல படங்களை உருவாக்குங்கள் அதற்காக என்னிடம் வந்தால் அதற்கு இசையமைத்து கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து இப்போது பாலிவுட் சினிமாவில் மட்டுமல்லாது மொத்த இந்தியத் திரையுலகின் பார்வையையும் பெற்றிருக்கிறது.