சென்ற ஜூலை மாதம் 10ம் தியதி, இந்தியாவின் கர்நாடகா மாநிலம் டேவனகேரே அருகே உள்ள காஷிப்பூர்தண்டா பகுதியில் வசிக்கும் சேத்தன் மற்றும் சந்திர நாயக் உள்ளிட்ட நண்பர்கள்,
தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு துப்பாக்கியை திருடிச் சென்றனர். இந்த கொள்ளையில் தனக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என சேத்தனிடம் சந்திர நாயக் கேட்டுள்ளார். இல்லையென்றல் காவல் அதிகாரியிடம் காட்டிக்கொடுத்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால்,சந்திர நாயக்கை கொலை செய்ய சேத்தன் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டார்.
உனக்கு பங்கு பிரித்து தருவதாக கூறி, சந்திரநாயக்கை சூல்கேர் பகுதி அருகில் உள்ள தொட்டிலு என்னும் பகுதிக்கு அவரை வரவழைத்த சேத்தன், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள். இந்த கொலை சம்பந்தமாக விசாரணையை தொடங்கிய காவலர்கள், கர்நாடக காவல் படையில் இடம் பெற்றுள்ள துப்பறியும் நாயான துங்காவை வரவழைத்துள்ளனர். துங்கா சம்பவ இடத்தை நன்றாக நோட்டமிட்டு மோப்பம் பிடித்து, கொலை நடந்த அந்த இடத்தில் இருந்து சுமார் 12 கி.மீ., தூரத்தை 2 மணி நேரத்தில் துரத்தி ஓடியது. கடைசியாக காஷிப்பூர் தண்டா எனும் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே நின்றுள்ளது.
அந்த வீடு சந்திர நாயக்கின் உறவினர் வீடாகும். அதன் அருகே சேத்தன் போனில் எவரிடமோ நின்று பேசிக்கொண்டிருப்பதை பார்த்த காவலர்கள், அவரை உடனே கைது செய்தனர். அவரிடம் நடத்திய கொலை சம்பவம் குறித்த விசாரணையில் கொள்ளை மற்றும் கொலை குற்றத்தை சேத்தன் ஒப்புக்கொண்டார். கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 12 கி.மீ தூரத்தை 2 மணிநேரத்தில் துரத்திச்சென்று கொலை குற்றவாளியை தேடி கண்டுபிடித்த துங்கா காவல் நாய்க்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.
பிறந்த குட்டியாக கர்நாடகா காவல் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட துங்கா ஒன்பது ஆண்டுகளில் 30 கொலை குற்றங்கள் உள்ளிட்ட 60 வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க உதவி புரிந்துள்ளது. இவற்றுள் 25 திருட்டுச் சம்பவங்களும், 5 கூட்டுக்கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களும் அடங்கும் என்கிறர்கள் காவல்துறை அதிகாரிகள்.