இந்தியாவின் நெருங்கிய நேச நாடாக இருந்த நேபாளம், சிலகாலமாக இந்தியாவை எதிர்த்து கொண்டு நிற்கிறது.
இந்தியாவுக்கு சொந்தமான நிலங்களை எங்களுக்கு சொந்தம் என்று கூறி, நேபாள நாட்டின் மேப்பை திருத்தியது. அதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் அனுமதி வாங்கியது.
இந்தியா தனது ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்வதாக அந்தநாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலி செய்தி ஊடகங்களில் புகார் கூறினார். சில நாட்களுக்கு முன்பு இந்திய தொலைக்காட்சிகளுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் கடவுள் ராமர் ஒரு நேபாளி என்று கூறி அடுத்த பிரச்சனையை நேபாள பிரதமர் சர்மா ஒலி ஆரம்பித்து வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடவுள் ராமர் ஒரு நேபாளி என்றும், அவர் இந்தியரே அல்ல என்றும், நிஜமான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது என்றும் கூறியதாக நேபாள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது இந்தியாவில் அதிர்வலைகளை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்திய – நேபாள உறவில் பிரச்சனை ஏற்பட்டுள்ள இந்த நிலையில், சர்மா ஒலியின் இந்தப் பேச்சு இந்தியாவில் புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது.