ஒரே நாளில் கொரோனா நோயை குணமாக்கும் என்று கூறி, மூலிகை மைசூர்பாக் விற்பனை செய்த கடைக்கு, கோவை உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர்.
கொரோனா நோயால் தொழில்கள் விழுந்து விட்டதே என்று வருத்தப்படுவோர் பலபேர் இருந்தாலும், அதை பயன்படுத்தி காசு சம்பாதிக்க நினைப்போரும் ஊர்களில் இருக்கத்தான் செய்கின்றனர். கோவை, தொட்டிபாளையம் பகுதியில் செயல்படும் ஸ்வீட் கடை உரிமையாளர் ஸ்ரீராம், என்பவர், கொரோனா நோயை ஒரே நாளில் விரட்டும் மூலிகை மைசூர்பாக் என்று கூறி, மைசூர்பாக் தயார் செய்து விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.
1 கிலோ ரூபாய் 800 க்கு மைசூர்பாக் விற்ற போதிலும், கொரோனா நோய் குணமாகி விடும் என்று நம்பி பலரும் வாங்கிச்செல்ல ஆரம்பித்துள்ளனர். உலக சுகாதார நிறுவனமே, கொரோனாவுக்கு இதுவரையிலும் மருந்தில்லை என்று கூறி வரும் இந்த நிலையில், ஒரே நாளில் கொரோனா நோயை மைசூர்பாக் விரட்டி விடும் என்று அவர் கூற ஆரம்பித்ததால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காலை, அவரது கடையில், கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பேக்கரி மற்றும் ஸ்வீட் கடையான அங்கு, விற்பனைக்கு இருந்த 120 கிலோ மைசூர்பாக்கையும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு, சுமார் 1 லட்சம் ரூபாய் இருக்கும். பின்பு கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், அவரது விற்பனை உரிமத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
டாக்டர் தமிழ்செல்வன் பேசுகையில், இந்த மூலிகை மைசூர்பாக் தயார் செய்ய எந்த அனுமதியும் பெறவில்லை. இவர் பொய்யான விளம்பரம் செய்து, மைசூர்பாக் விற்றதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைசூர்பாக்கானது பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.