இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் பிரபல கிரிஸ்தவ போதகர் பால் தினகரன் அவர்களுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று 2-வது நாளாக சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
பால் தினகரன் வீட்டில் 2வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை..! பலஆயிரம் கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியதாக தகவல்.
முதல்நாள் சோதனையிலேயே பல கோடி மதிப்புள்ள பல ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும், அது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது. தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் ஊழியம் நடத்தி கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருகிறார் போதகர் பால் தினகரன். இவர் முறையாக நாட்டிற்கு வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வெளிநாடுகளில் உள்ளவர்களின் மூலம் வந்த பணத்தை கணக்கு காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது தொடரபான புகாரின் அடிப்படையில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட 28 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். இன்று இரண்டாவது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. சுமார் 200 -க்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் பலஆயிரம் கோடி மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.