தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் படம் பார்க்க வரும் மக்கள் 100% இருக்கையிலும் அமர்ந்து படம் பார்க்கும் வகையில் அனுமதி வழங்க வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு தொடர் கோரிக்கையை வைத்து வந்தனர். முதலில் திரையரங்கை திறக்க அனுமதி வழங்கிய தமிழக அரசு, 50% இருக்கைகளில் மக்கள் அமர்ந்து திரைப்படங்களை பார்க்க அனுமதி வழங்கியது.
இதற்கிடையே, நடிகர் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, திரையரங்குகளில் 100 % இருக்கைகளில் மக்கள் அமர்ந்து திரைப்படத்தை பார்க்க அனுமதி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதேபோல் நடிகர் சிம்புவும் அறிக்கை வாயிலாக இக்கோரிக்கையை வைக்க, தமிழக அரசு திரையரங்குகளில் 100% இருக்கைகளில் பொதுமக்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதி வழங்கியது.
இந்த சூழ்நிலையில் தமிழக அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்தால், கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் நீர்த்துப்போகும் என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு எச்சரிக்கை கொடுத்தது. சென்ற டிசம்பர் 28-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் இந்த முடிவை ரத்து செய்ய கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை நீதிமன்ற நீதிபதிகள், “திரையரங்குகளில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வரை 50% இருக்கைகளில் மட்டுமே பொதுமக்ககளை அனுமதிக்க வேண்டும்” என்று அறிவித்துள்ளனர்.
மேலும், திரையரங்குகளில் 100% இருக்கைகளில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து தமிழக அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.