
அமெரிக்க அதிபர் பார்லிமென்டில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு, உலக நாட்டு அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்து அமெரிக்க பார்லிமென்ட் ஒப்புதலை வழங்கவிருந்த இந்த நிலையில்,

தற்போதைய அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்கள் பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து காவல் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் உயிரிழந்தார். தற்போது வாஷிங்டனில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உலக தலைவர்கள் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் ஐ.நா பொது செயலாளரும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்: அமெரிக்காவில் நடந்த சம்பவம் மிக வேதனை அளிக்கிறது. இது போன்ற சூழ்நிலையில், நாட்டின் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் மதித்து அரசியல் தலைவர்கள் அவைகளை பின்பற்றுபவர்கள் வன்முறையிலிருந்து விலகியிருக்க வேண்டியது மிக அவசியம் என்று பதிவிட்டுள்ளார்

இந்திய பிரதமர் மோடி: வாஷிங்டன்னில் நடந்த வன்முறை மற்றும் கலவரம் குறித்த செய்திகள் மிகவும் வேதனை அளிக்கிறது. அமைதியான முறையில் தான் அதிபர் அதிகாரம் மாற்றப்படும் நடவடிக்கைகள் அங்கு தொடர வேண்டும். ஜனநாயக நடைமுறைகளை, சட்டவிரோத போராட்டங்களாக மாற்றுவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ: நமது அண்டை நாடும், நட்பு நாடான அமெரிக்காவில் ஜனநாயகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால், கனடா மக்கள் ஆழ்ந்த வேதனையும், கவலையும் அடைந்துள்ளனர். மக்களின் விருப்பத்தை வன்முறை ஒஎருபோதும் மாற்றிவிடாது. அமெரிக்காவில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்: அமெரிக்காவில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளது, வனமுறைக்கு வன்முறை நான் கண்டனம் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்: அமெரிக்காவில் நடந்த சம்பவங்கள் தவறு, ஜனநாயகத்தில், மக்கள் அளித்த ஓட்டு, அவர்களின் எண்ணங்கள் கேட்கப்பட்டு அவை, அமைதியான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்: அமெரிக்காவில் ஜனநாயகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்று கொள்ள முடியாதது. இதனை தடுத்து நிறுத்த வேண்டியது தற்போதைய அதிபர் டிரம்ப்பின் முக்கிய கடமை என்று தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார்.

ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோவென்: நடந்த சம்பவத்திற்கு, அதிபர் டிரம்ப்பும் மற்றும் சில உறுப்பினர்களுமே காரணம். ஜனநாயக முறையில் நடந்த தேர்தல் முடிவுகள் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.

அயர்லாந்து வெளியுறவு அமைச்சர் சைமன் கோவேனி: வாஷிங்டன்னில் நடந்தது பேர்அதிர்ச்சியையும் மிகவேதனையையும் அளிக்கிறது. தற்போதைய அதிபர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடந்த தேர்தல் முடிவுகளை மாற்றும் முயற்சியாகவும் இதனை உற்று பார்க்க வேண்டியுள்ளது. உலகம் இதனை கவனித்து வருகிறது. அமைதி நிலை நாட்டப்படும் என நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து பிரதமர மார்க் ரூட்டே: வாஷிங்டன்னில் அதிர்ச்சியளிக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது. ஜோபிடன் வெற்றியை, அதிபர் டிரம்ப் இன்றே அங்கீகரிக்க வேண்டும். என்று அறிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்: உலகம் முழுவதும், ஜனநாயகத்திற்கான எடுத்து காட்டாக அமெரிக்க பார்லிமென்ட் உள்ளது. ஜனநாயகத்தின் கோவிலாக அமெரிக்க காங்கிரஸ் உள்ளளது. இன்று நடந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்று அறிவித்துள்ளார்.

இவ்வாறு பல நாட்டு அதிபர்களும் பிரதமர்களும், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
