
பச்சை முட்டை ஆஃப்பாயில் விரும்பிகளே, பச்சை முட்டை மற்றும் ஆஃப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்குமாறு அரசு மருத்துவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் படுவேகமெடுத்து வரும் பறவை காய்ச்சல் தற்போது கேரளா மாநிலத்தில் உள்ள வாத்து மற்றும் கோழிகளை தாக்கியுள்ளது.

அவ்வாறு நோய் தாக்கப்பட்ட பறவை இனங்களை அரசு சுகாதார அதிகாரிகள் தீ வைத்து எரித்து அழித்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி ஆகிய மூன்று வழிகளில் வாகனங்கள் இயங்குகின்றன. தற்போது குமுளி மலைச்சாலையில் சாலைப்பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு வாகன போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

கம்பம் மெட்டு, போடி மெட்டு மலைப்பாதைகளில் மட்டும் வாகனங்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றது. இந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. பறவை காய்ச்சலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அவர்களின் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு பின்பு மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். கேரள மாநிலத்தில் இருந்து எந்த பொருட்களையும் தமிழகத்துக்கு கொண்டு வரக்கூடாது என்றும், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்குமாறு அவரின் கீழ் பணிபுரியும் அரசு அதிகாரிகளுக்கு அவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய்க்கு தேவையான மருந்துகளை தேவையான அளவில் இருப்பு வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர் பறவைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக இந்த வைரஸ் கிருமி மனிதர்களை தாக்குவதில்லை என்ற போதும் சில நேரங்களில் நோய் பாதித்த பறவைகளை சாப்பிடும்போது மனிதர்களுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது.

எனவே உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொது சுகாதார நிலையங்களை மேம்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் வீட்டில் வளர்க்கும் கோழிகளை வீட்டு எல்லைகளை விட்டு வெளியில் சென்று இறைமேய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கோழி, வாத்து, கொக்கு ஆகியவற்றை இந்நோய் தாக்கும் அபாயம் உள்ளது. கோழி தீவனம், தண்ணீரை சுத்தமான தட்டில் வைத்து கொடுக்க வேண்டும். வாத்து, வான்கோழி ஆகியவற்றை ஒன்றாக வளர்க்கக்கூடாது. சேவல் சண்டை நடக்கும் இடங்களில் வீட்டு சேவல்களை கொண்டு செல்ல கூடாது. ஆஃப்பாயில், பச்சை முட்டை ஆகியவற்றை மக்கள் சாப்பிடக்கூடாது.

முழுமையாக அவித்த முட்டை அல்லது பொறித்த ஆம்லெட் ஆகியவற்றை மட்டுமே அவர்கள் சாப்பிட வேண்டும். நாம் வாங்கும் கோழி இறைச்சியில் கிருமி இருந்தால் அது சமைக்கும்போது அழிந்து விடும். முழு கோழியை அப்படியே சமைப்பது கூடாது. அரைவேக்காட்டில் சமைத்த கோழிக்கறி, முட்டை ஆகியவற்றையாரும் சாப்பிட வேண்டாம் என்று அறிவித்துள்ளனர்.
