கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் சென்ற மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி துறை நிறுவனங்கள் மூடப்பட்டது.
மத்திய அரசு வழிகாட்டுதலின் படி பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, ஒரு சில மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு பிறகு அனைத்து கல்லூரிகளையும் திறந்து வகுப்புகள் செயல்பட புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் யாசம் லக்ஷ்மி நாராயண ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயர்கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவின்படி புதுவையில் நாளை முதல் அனைத்து உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி கல்லூரிகள் அனைத்தும் வகுப்புகளும் திறக்கப்படும்.
கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிவது அவசியம். மேலும் சமூக இடைவெளியை அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். கல்லூரி வகுப்புகள் ஆறு நாட்கள் நடைபெறும். ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே வகுப்பறையில் அனுமதிக்க வேண்டும்.
மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் கல்லூரிக்கு வர அனுமதிக்க வேண்டும். கல்லூரிக்கு வரும் போது மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அடிக்கடி கல்லூரிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும் என புதுச்சேரி உயர்கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.