தமிழகத்தில் அதிமுக கட்சியின் தேர்தல் பரப்புரை விளம்பரங்களை ஒளிபரப்பிய சன் டி.வி. நிர்வாகத்தினை, திமுக எம்.பி. செந்தில் குமார் மிகக்கடுமையாக விமர்சித்ததையடுத்து அவர் தொடர்பான எந்த செய்தியும் ஒளிப்பரப்பக்கூடாது என மாறன் சகோதரர்கள் ஆணையிட்டுள்ளனர்.
தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதிமுக, திமுக கட்சிகள் தேர்தல் பணிகளில் அதிதீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி தொடங்கி விட்ட நிலையில்,. இன்னொரு பிரச்சார வடிவமாக தமிழக அரசின் சார்பில் வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் வீடியோ விளம்பரம் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த விளம்பரத்தில் தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக குறிப்பிடப்படுகிறது.
அதிமுக-வின் இந்த தேர்தல் பரப்புரை விளம்பரமான காணொலியை, அனைத்து தமிழ் ஊடகங்களுக்கும் ஒளிப்பரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் அல்லாது உலகமெங்கும் இருக்கும் அதிகமான தமிழ் மக்களால் பார்க்கப்படும் சன் டிவி-யில் இந்த விளம்பரங்கள் ஒளிப்பரப்பட்டது பெரும் விவாதத்தை ட்விட்டரில் ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியை நடத்தும்சன் குழுமம் – தற்போதைய திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமானது.
இந்த நிலையில் சன் டிவி-யில் அடிக்கடி ஒளிபரப்பாகி வரும் தமிழக அரசின் சாதனை விளம்பரங்கள் குறித்து தர்மபுரி மக்களவை உறுப்பினரான டாக்டர் செந்தில்குமார் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில்;- சேற்றில் ஒருகால் ஆற்றில் ஒருகால். சன் டிவி ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யமாக இருக்கலாம். ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டன் இவற்றை லேசாக எடுத்துக் கொள்வதில்லை. அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள் என்று தனது பக்கத்தில் பதிவிட்டு மாறன் சகோதரர்களை மிகக்கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் , எங்களுக்கு தொழில் தான் முதன்மையானது. அது தான் முக்கியம். திமுகவிற்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் என்றும் இருக்காது. திமுகவிடம் எந்த எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை, என்று வெளிப்படையாக அவர்கள் அறிவித்துவிட்டு இது போல் விளம்பரங்களை அவர்கள் ஒளிபரப்பட்டும் என்றும் அவர் அதில் கூறியிருந்தார். இது திமுக-வில் பெரும் பூதாகரமாக வெடித்தது. இந்த நிலையில், தர்மபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தொடர்பான எந்த செய்தியும் ஒளிபரப்பக்கூடாது என்று தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு திமுக எம்.பி. கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக திமுக எம்.பி. செந்தில்குமார் தனது டுவிட்டர் பதிவில்;- தினகரன், தமிழ்முரசு, மாலை முரசு, சன் செய்திகளில் இனி என்னை சார்ந்த செய்தி வெளியிட வேண்டாம் என அவர்கள் நிருபர்களுக்கு அந்த நிறுவனம் கட்டளை பிறப்பித்துள்ளது. சமூக வலைதளம் முக்கியத்துவம் வாய்ந்த இக்காலத்தில், சீப்பு மறைத்து வைப்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்றும் விமர்சனம் செய்துள்ளார். சட்டமன்ற தேர்தல் சமயத்தில் இப்படியொரு திமுக எம்.பி. ஒருவரே அக்கட்சி சார்ந்த உறவுகளால் நடத்தப்படும் சன் டி.வி.யை கடுமையாக விமர்சித்து வருவது சாமானிய மக்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை உற்றுநோக்க வைத்துள்ளது.
ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சுடலை என்று கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்ட சன் டி.வி-க்கு தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கடும் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.