
இந்தமாதம் 6-ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டம் ஒன்றில் ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளி வந்தது. இதையடுத்து திமுக கூட்டணியில் இருக்கும் இஸ்லாமிய கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை பெரும் எதிர்ப்புகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 6-ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர் மட்டுமே பங்கேற்பார் எனவும் அசாதுதீன் ஒவைசி பங்கேற்பதாக வெளிவந்த செய்திகள் வெறும் வதந்தி எனவும் அக்கட்சியின் கழக சிறுபான்மையினர் உரிமை பிரிவு செயலாளர் மஸ்தான் தெரிவித்து இருந்தார். இதன் பின்னர் அசாதுதீன் ஒவைசி-யின் பெயர் இல்லாமல் அழைப்பிதழும் தற்போது தயாராகிவிட்டது.

மேலும் பிஹாரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஐந்து தொகுதியில் வெற்றிபெற்ற ஒவைசி கட்சி தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் இஸ்லாமிய இயக்கங்களை ஒன்றிணைத்து போட்டியிட உள்ளதாக பல தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஒவைசியை தனியாக விட்டுவைத்தால் திமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு உண்டாகும் என்பதால், அவரை திமுக தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ள ஸ்டாலின் விரும்பியதாகவும் ஆனால் அதற்கு தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், திமுக-வின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் உள்ள சேப்பாக்கம் அல்லது திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது. அந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் என்பதால் அங்கு அவர்களின் வாக்குகள் அதிக அளவில் இருப்பதால் அங்கு பிரச்சாரத்திற்கு ஓவைசி வந்தார் என்றால், முழுமையாக அந்த வாக்குகளை நாம் அள்ளி விடலாம் என்பதால் உதயநிதியின் திட்டத்தின் படி ஒவைசியை அவரது ஆதரவாளர்கள் அழைத்துள்ளனர்.

ஆனால் இந்த விவகாரம் ஸ்டாலினிடம் போகாமல் முற்றிலுமாக மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஒவைசி அழைக்கப்பட்ட செய்தி வெளியானதும் மனிதநேய மக்கள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க, மிகவும் கடுப்பான ஸ்டாலின் ஓவைசி அழைப்பை உடனே ரத்து செய்ய சொல்லிவிட்டார். அப்பா, மகனுக்கு இடையே சரியான அரசியல் புரிதல் இல்லாமல், முரண்பாடாக செயல்பட்டு வருவதால், அரசியல் வியூக வகுப்பாளரான பிஹாரி பிரசாந்த் கிஷோர் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
