
இந்தியாவின் தென்கோடி முனை. தமிழகத்திற்கு தெற்கு எல்லையாகத் திகழும் நகரம். வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம். ஆதித தமிழகத்தின் ஆவண நகரம். அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி, சுற்றுலாத் தலங்களில் கவனத்திற்குரியது. இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத்திருவிழா. வானம் வாரியிறைக்கும் வர்ண ஜாலம் அது. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.
சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமம்

வங்கக் கடலோரம் உதயமும், மறைவும் ஒரே இடத்தில் காணக் கூடிய கண்கொள்ளாக் காட்சி. சூரிய உதயத்தை வருடம் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சூரிய மறைவை ஜுன் ஜுலை ஆகஸ்ட் மாதங்கள் தவிர்த்து மற்ற மாதங்கள் முழுவதும் காணலாம். இதற்கென்று அமைக்கப்பட்ட கோபுரம் மூலம் இக்காட்சிகளை மிகச் சிறப்பாகக் காண முடியும். இது நமக்காக இயற்கை வரைந்த எழில் ஓவியம்.
கேரளபுரம்

விநாயகர் கோயில் இல்லாத ஊர் இருக்கிறதா? இதுவொரு புதிரான விநாயகர். தக்கலை அருகேயுள்ள கேரளபுரத்து விநாயகர் கோயில் பிரபலமானது. இங்குள்ள விநாயகர் சிலை ஆறுமாதம் கறுப்பாகவும் ஆறு மாதம் வெள்ளையாகவும் தெரிவார். நேரில் சென்றால் புதிரின் உண்மை புரியும்.
குகநாதசுவாமி கோயில்

தென்கோடி முனையிலும் சோழர்கள் கால்தடம் பதித்துள்ளார்கள் என்பதற்கு இக்கோயில் ஒரு சான்றாகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜசோழன் கட்டிய கோயில் என்று கருதப்படுகிறது. சோழர்களின் கட்டடக் கலை பாணியில் மிளிரும் குருநாதசுவாமி கோயிலிலுள்ள பதினாறு கல்வெட்டுகள் அதன் வரலாறைச் சொல்கின்றன. இக்கோயில் குமரி ரயில் நிலையம் அருகே உள்ளது. நேரம் காலை 6-11.15 மாலை 5-8.15 மணி வரை.
கன்னியாகுமரி அம்மன் கோயில்

கடலில் நீராடும் துறை அருகே ஓர் அழகிய சித்திரம்போல அமையப் பெற்றிருக்கிறது குமரியம்மன் கோயில். இந்த அம்மனின் பெயருக்குக் காரணம் இருக்கிறது. குமரி அம்மன் சிவனைத் திருமணம் செய்துகொள்ள முடியாத நிலையில் காலம் முழுதும் கன்னியாகவே வாழ ஒரு நோன்பை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவே கன்னியாகுமரி என்று பெயர் வரக்காரணம் என்கிறார்கள். குமரியம்மனின் வைர முக்குத்தியின் ஜொலிப்பை கடலில் இருந்தும் கூடப் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். தொலைபேசி – 04652 – 246223.
நாகர்கோவில்

நாகராஜா கோயில் அமைந்த நகரம். கன்னியாகுமரி மாவட்டத் தலைநகரம் இது. மிதமான பருவநிலை நிலவும் நகரம். நாகராஜா கோயிலின் தூண்களில் தீர்த்தங்கரர், மகாவீரர் மற்றும் பர்சவநாதர் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இத்திருக்கோயிலின் நுழைவாயில் சீன புத்த விகாரக் கட்டக் கலையின் பாதிப்பைக் கொண்டுள்ளது. நாகர்கோயிலில் பேசப்படும் தமிழ் வித்தியாசமானது. ஆதித்தமிழும் இன்றைய மலையாளமும் கலந்து பேசப்படும். ஆனால் அடிப்படையில் அது தமிழ் மொழியே.
சுசீந்திரம்

ஊரெல்லாம் சுற்றி வந்தாலும் இசை எழுப்பும் தூண்களையும், பெண் விநாயகரையும் 18 அடி உயர அனுமன் சிலையையும் பார்த்திருக்க முடியாது. சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்கு வராமல் இவையெல்லாம் சாத்தியமில்லை. விஷ்ணு, சிவன், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் கலைத்திறன் மிக்கது. இதுவொரு கலைக் கருவூலம். கண்டு ரசித்தால் வளம் பெறலாம்.
மருத்துவ மலை

மலைகளில் காற்றும் மழையும் உலவுகின்றன. அதோடு பின்னணிக் கதைகளும் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இம்மலை மருத்துவ மலை மருந்து வாழும் மலை என்று அழைக்கப்படுகிறது இது மருத்துவ மூலிகைகள் விளையும் பண்ணையாக இருக்கிறது. ராமனின் தம்பி லட்சுமணன் போரில் அடிபட்டு காயமடைந்தபோது அனுமன் அக்காயத்தை குணப்படுத்துவதற்காக மகேந்திரபுரியிலிருந்து இலங்கைக்கு கொண்டு சென்ற சஞ்சீவி மலையின் ஒரு துண்டு இங்கு விழுந்து மருத்துவ மலையாக நிற்கிறது என்று போகிறது கதை. இம்மலையின் உச்சி 800 அடி. இது நாகர்கோயிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது.
வள்ளிமலை

முந்நூறு படிகள் ஏற சம்மதமா? அப்படியென்றால் குன்றின் மீது அமைந்த வள்ளிமலை கோயிலைத் தரிச்சிக்கலாம். ஒன்றின்மேல் ஒன்றாக மூன்று அடுக்குள் கொண்டது. விநாயகப் பெருமானும் காசி விசுவநாதரும் எழுந்தருளியுள்ள இக்கோயில் பல்லவர் மற்றும் நாயக்கர் கால கட்டடக் கலைப் பாணியில் அமைந்தது.
முருகன் குன்றம்

மனித சஞ்சாரமற்ற ஓர் அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் உண்மையா? அப்படியானால் செல்ல வேண்டிய இடம் முருகன் குன்றம். வெயில் பொழுதுகளிலும் நிலாப் பொழுதுகளிலும் ஆளரவமற்ற அமைதி குடியிருக்கும் குன்றம் இது. சித்ரா பௌர்ணமியன்று முருகன் குன்றம் கோடியழகு. இங்கு செல்ல கன்னியாகுமரியிலிருந்து 2 கி.மீ. பயணிக்க வேண்டும். சம்மதம் தானே?
உபகார மாதா கோவில்

சூரிய உதயம், அஸ்தமனம் இவை மட்டுமல்ல குமரி, எவ்வளவோ அற்புதங்கள் இருக்கிறன்றன. பழமை வாய்ந்த தேவாலயங்களில் உபகார மாதா கோயிலும் ஒன்று. இதன் கோபுர உயரம் 153 அடி. இங்குள்ள தங்கச் சிலுவையின் உயரம் 8 அடி உயரமாகும். இந்த அன்னை உங்களுக்கு உபகாரம் செய்வார்.
புனித சேவியர் தேவாலயம்

புனித சவேரியார் கோவாவிலிருந்து தமிழகக் கடலோரப் பகுதிகளுக்கு இறைப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ இறைப்பணியாளர். எப்போதும் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கோட்டாறுக்கு வரத் தவறியதில்லை. அவர் கோட்டாறில் தங்கும் காலங்களில் புனித மேரி ஆலயம் சென்று வழிபடுவது வழக்கம். கோட்டாறு மக்கள் மத்தியில் வலிய பண்டாரம் என்றே அறியப்பட்டிருந்தார். வேணாட்டு மக்களான படகர்கள் படையெடுப்பு நிகழ்த்தியபோது அதைத் தடுத்து நிறுத்திய பெருமையில் மகிழ்ந்த மன்னர் பாராட்டிய கையோடு சவேரியாருடன் நெருங்கிப் பழகினார். இவரது பணியை அங்கீகரிக்கும் விதமாக கோட்டாறில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் கட்டிக் கொள்ள அனுமதி அளித்தார். இரண்டு முறைகளுக்கு மேல் புதுப்பிக்கப்பட்ட இந்தத் தேவாலயம் புனித சவேரியாரின் பெருந்தொண்டை உலகுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. இத்தேவாலய வளாகத்திற்குள் புனித அன்னை தேவாலயமும் உள்ளது.. மிகப்பழமையான தேவாலயத்தைக் கண்டு வருவதே பெரும்பேறு
பீர்முகமது தர்கா

இது பீர்முகம்மது ஒலியுல்லா தர்கா எனவும் அழைக்கப்படுகிறது. தென்காசியில் பிறந்து பீர்மேடு பகுதிக்குச் சென்று ஆன்மிகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தத்துவ ஞானியான முகம்மது அப்பா எனப்படுகிற பீர்முகம்மது ஒலியுல்லா பல தத்துவ நூல்களை எழுதியுள்ளார். பத்மநாபபுரம் கருங்கல் கோட்டைக்கு இக்கவிஞர்கள்தான் அடிக்கல் நாட்டியதாகச் சொல்லப்படுகிறது. கேரள மக்களும் தமிழக மக்களும் சாதி மத பேதமின்றி கலந்து கொள்ளும் திருவிழா. ரஜாப் மாதத்தில் கொண்டாடப்படும் ஆண்டு விழா.
முக்கூடல்

முக்கடல் சங்கமித்தால் என்ன? நாகர்கோவில் நகராட்சிக்கு குடிநீரை முக்கூடல்தான் வழங்குகிறது. இந்த அணையை கட்டியவர் சித்திரை மஹாராஜா. சுசீந்திரம், கன்னியாகுமரி நகராட்சிகளுக்கும் தண்ணீர் தாகத்தை முக்கூடல்தான் தணிக்கிறது. சுற்றிப் பார்த்து மகிழ சிறந்த இடம். கூட்டமாகச் சென்று குதூகலித்து வாருங்கள்.
பேச்சிப்பாறை அணை

இந்த அணையின் பெயரை நீங்கள் அடிக்கடி செய்திகளில் கேள்விப்பட்டிருப்பீர்கள். பார்த்து பரவசம் கொள்ள வேண்டிய நீர்ப்பரப்பு. மிகச் சிறந்த பொழுது போக்குத் தலம். இங்கு படகுப் பயணம் சென்று மகிழலாம். கன்னியாகுமரியிலிருந்து 75 கி.மீ. தொலைவில் பேச்சிப்பாறை அணை நீரால் தளும்பிக் கொண்டிருக்கிறது.
உலக்கை அருவி

கோடையிலும் வற்றாத அருவி இது. தோவாளை வட்டம் அழகிய பாண்டியபுரத்தில் அமைந்துள்ள இயற்கை அற்புதம். இயற்கையின் பேரழகை ரசிக்கவும் அருவியில் நீராடி மகிழவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அரசின் பாதுகாப்பிலுள்ள பாதை வழியாகச் சென்று அருவியை அடைய வேண்டும்.
திற்பரப்பு அருவி

ஒரு பரந்து விரிந்த பார்வையைத் தரும் திற்பரப்பு, அழகும் புனிதமும் ஒன்று கூடிய இடம். இங்குள்ள புனித அருவியும் பச்சை மலையும் கோதையாறும் நம்மை வசீகரித்துக் கொள்ளும் அழகின் தொட்டில்கள் பளிச்சென மின்னி தெறித்து விழும் இந்த அருவி பார்வைக்கு விருந்தளிக்கிறது. தரையில் கொட்டும் அருவி தலையில் முட்டும்போது புத்துணர்ச்சி கிடைக்கும். நீராடி மகிழ திற்பரப்பு திகைப்பூட்டும் அனுபவம் தரும்.
முட்டம்

கடல் உரசும் கரைகள்; அலை புரளும் கடல், ஒரு தனித்துவமான கடலோர கிராமம் முட்டம். அப்படியே அமைதியாக நேரம் போவது தெரியாமல் மணற்பரப்பில் அமர்ந்துவிடலாம். என்னவொரு அழகு. சொல்லில் சிக்காத காட்சிகள் ஏராளம். நம்மைக் கண்சிமிட்டி அழைக்கும் கலங்கரை விளக்கம் இங்குண்டு. கன்னியாகுமரியிலிருந்து முட்டம் கிராமம் பார்க்க 40 கி.மீ. செல்லமாட்டீர்களா என்ன.?
சிதரால்

மலைமீது அமைந்துள்ள திருக்கோயில். சமணமத தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் நிறைந்த அழகுக் கோயில். இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையால் பராமரிக்கப்படும் இக்கோயிலை தரிசிக்க கன்னியாகுமரியிலிருந்து 45 கி.மீ. செல்ல வேண்டும்.
திருவட்டார்

கலைமிகு கோயில். கோயிற் கட்டடக் கலைக்குச் சிறந்த உதாரணம். சுவரோவியங்கள் நிறைந்த திருத்தலம். கன்னியாகுமரியிலிருந்து 70 கி.மீ. தொலைவில் திருவட்டார் உள்ளது.
உதயகிரி கோட்டை

தமிழகத்தின் பழமையான நினைவுச் சின்னம். மார்த்தாண்டவர்மன் ஆட்சி செய்த கால கட்டத்தில் (கி.பி. 1729 – 1758) கட்டப்பட்ட கோட்டை. இங்கு ஒரு துப்பாக்கி பட்டறையும் டச்சுக்காரரான தளபதி டிலானியின் கல்லறையும் இருக்கிறது. டச்சு தளபதி பற்றி ஒரு சுவாரசியமான கதை உண்டு. குளச்சலில் நடந்த போரில் சிறைப்பிடிக்கப்பட்ட கைதியான டச்சு தளபதி டிலானி மன்னன் மார்த்தாண்ட வர்மனின் நம்பிக்கையைப் பெற்று விசுவாசமான தளபதியாக உயர்ந்தான். அதுமட்டுமல்ல மார்த்தாண்ட அரச வீரர்களுக்கு ஐரோப்பிய போர் முறையைக் கற்றும் தந்தானாம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையைப் பகல் நேரத்தில் மட்டுமே பயணிகள் பார்த்து களிக்க முடியும்.
வட்டக்கோட்டை

இதுவொரு கம்பீரமான கற்கோட்டை. குமரி முனையின் வடகிழக்கில் 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இக்கோட்டை தென் திருவிதாங்கூர் வரிசை என்று சொல்லப்படும் எல்லைக் காப்பரண் வரிசையில் வருகிறது. நாஞ்சில் நாட்டு பாதுகாப்பிற்காக மன்னன் மார்த்தாண்டவர்மன் கட்டினான். கோட்டையின் உட்புறத்தில் உறுதி வாய்ந்த உட்புறக் கட்டுக்கள் மன்னனின் டச்சுத் தளபதி டிலானியின் உத்தரவின் கீழ் கட்டப்பட்டவை. செங்கோண வடிவிலான இந்த வட்டக்கோட்டை மூன்று ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. இதன் அழகை பிரமாண்டத்தைக் காண ஒருமுறை சென்று வாருங்கள். இனி வார்த்தைகள் போதும்.
அரசு பழப்பண்ணை

பழங்கள் செழிப்பின் அடையாளம். பழங்களை கூடையில் பார்ப்பதைவிட தோட்டத்தில் பார்ப்பது தனியொரு அற்புத அனுபவம். இந்த அரசு பழப்பண்ணையில் பல்வேறு பழ வகைகள், நூற்றுக்கணக்கான செடி வகைகள் மற்றும் பல நறுமண மரங்களைக் காண முடியும். கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோயில் சாலையில் 2 கி.மீ. சென்றால் பழப்பண்ணையை அடையலாம். நேரம் காலை 9-11 மதியம் 1-3 மணி வரை. விடுமுறை சனி ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள்.
மாத்தூர் தொங்குபாலம்

ஓர் ஓவியக் கோட்டினைப்போலத் தோன்றும் இது ஆசியாவின் மிக நீளமான குறுக்குப் பாலம். 115 அடி உயரமும் 1 கி.மீ. நீளமும் உடையது. அப்பாடா! நேரில் பார்த்தால் நிச்சயம் அசந்து போவீர்கள். திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் அருவிக்கரை வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மாத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது தொங்கு பாலம். பரளியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இப்பாலம் வழியே பட்டணம்கல் மலையிலிருந்து இன்னொரு பக்கத்திற்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. விளவங்கோடு கல்குளம் பகுதிகளின் விவசாய வளர்ச்சிக்காக அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராசர் முயற்சியின் கீழ் கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது. இங்கு குழந்தைகள் பூங்காவும் நீராடும் துறையும் இருக்கின்றன.
பத்மநாபபுரம் அரண்மனை

கன்னியாகுமரி செல்பவர்கள் பட்டியலில் பத்மநாபபுரம் அரண்மனை முதலிடத்தில் இருக்கும். திருவிதாங்கூரை ஆட்சி செய்தவர்களின் பழமை வாய்ந்த அரண்மனை. இது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக கி.பி. 1798 வரை திகழ்ந்தது. உள்பக்கத்தில் மட்டும் 6 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட பிரமாண்ட அரண்மனையில் போர்த்தளவாடங்கள் உட்பட பலவகையான பழங்காலப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ராமஸ்வாமி ஆலயத்தில் இராமாயண இதிகாசத்திலிருந்து பல காட்சிகள் 45 பிரிவுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. நவீன காலத்தில் பார்த்து மகிழக்கூடிய ஆதிகால அரண்மனை இது ஒன்றே. வாழும் வரலாறு.
அரசு அருங்காட்சியகம்

தென்னிந்திய கோயில்களின் கைவினை கலைபொருட்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ள காட்சியகம். கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. குமரிக்குச் செல்லும் பயணிகள் இங்கும் ஒருமுறை சென்று வாருங்கள். புதியதொரு அனுபவத்தை உணர்வீர்கள்.
தமிழன்னை பூங்கா

தமிழ் வாழ்வின் பெருமையை நிலைநிறுத்தும் பூங்கா. தமிழன்னைக்குத் தனியாக உருவாக்கப்பட்ட ஒரே பூங்கா. இங்கு புலியை முறத்தால் தடுத்த வீரப்பெண், முல்லைக் கொடி படர தேர் ஈந்த பாரி வள்ளல் சிலைகள் உள்ளன. தமிழ்ப் புலவர்களின் ஓவியங்களும் உண்டு. தமிழுக்கு அமுதென்று பேர்.
விவேகானந்தபுரம்

விவேகானந்தா கேந்திராவின் தலைமையகம் விவேகானந்தபுரம் என்று அழைக்கப்படுகிறது. இளைஞர்களின் மனங்களில் தன்னம்பிக்கையை விதைத்த விவேகானந்தரின் வாழ்க்கையை விவரிக்கும் படங்களும் அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது. பயணிகள் தங்கிச் செல்ல வசதிகள் இங்குண்டு மாகடல் நீரிலிருந்து சூரியன் மேலெழும் பரந்து விரிந்த காட்சியை விவேகானந்தபுரம் கடற்கரையிலிருந்து பார்ப்பது அற்புதம்.
விவேகானந்தரின் கண்காட்சி

ஆன்மிகத் தேடலின் போது நிகழ்ந்த சம்பவங்கள் பாரத் பராக்கிரமா என்ற பெயரில் சுடுமண் வடிவங்களால் சித்திரிக்கப்பட்டுள்ளன. இக் கண்காட்சியின் மேற்கூரை செங்கல்லால் நெட்டுக் கூம்பாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டட வடிவம் ஸ்ரீ சக்கர மேரு வடிவத்தில் விவேகானந்தர் உலகிற்கு ஒளியூட்ட உதவிய அவரது ஆத்ம சுடரை நினைவு கூர்கிறது. இந்தியாவை நேசிக்கும் அனைவரும் காண வேண்டிய கண்காட்சி. நாம் இதைப் பார்க்காமல் விட்டு வைக்கலாமா?
சுவாமி விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம்

சகோதர, சகோதரிகளே என்ற சொல்லில் உலகைக் கட்டிப் போட்டவர். எழுமின்!விழுமின்! என்ற வார்த்தைகளின் மூலம் இளைய மனங்களில் எழுச்சி தீபம் ஏற்றியவர். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவர். குமரிப் பாறையில் விவேகானந்தரின் சிலையும் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டு உள்ளது. இங்கு அமைதி தவழும் தியான மண்டபம் இருக்கிறது. படகுகள் மூலம் பாறையை அடைவது ஒரு பரவச அனுபவம்.
திருவள்ளுவர் சிலை

தமிழினம் செழிக்க இரண்டடி குறள் தந்த வள்ளுவருக்கு விவேகானந்தர் பாறையில் எழுப்பப்பட்டுள்ள 133 அடி உயரச் சிலை. இந்த உயரம் 133 அதிகாரங்களை நினைவுபடுத்துகிறது. நவீன கட்டடக் கலையின் அழகையும் தமிழர்களின் கலை நுட்பங்களையும் உள்ளடக்கி 5000க்கும் மேற்பட்ட சிற்பிகளின் உளியில் பிறந்த அற்புதம். கன்னியாகுமாரி சிற்பிகளால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட நினைவுச் சின்னம். படகுகள் மூலம் சிலையினைப் பார்வையிடலாம்.
காட்சிக் கோபுரம் – தொலைநோக்ககம்

சமதளத்திலிருந்து கடலின் பிரமாண்டத்தையும், விவேகானந்தர் சிலை, வள்ளுவர் சிலையையும் பார்ப்பதில் அனுபவம் வேறுவிதம். ஆனால் காட்சிக் கோபுரத்தில் நின்றபடி தொலை நோக்கியில் பார்ப்பபது தனி ருசி. குமரிக் கடலின் அழகை சுற்றுப்புறக் காட்சிகளை இங்கின்றி வேறெங்கே பார்க்க போகிறீர்கள்?
காந்தி நினைவாலயம்

மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள நினைவாலயம். முக்கடல் சங்கமத்தில் மூழ்கி நீராடுவதற்கு முன் தேசத் தந்தைக்கு இறுதி மரியாதை செல்லுத்துவதற்கு வசதியாக இது அமைக்கப்பட்டுள்ளது. மகாத்மா பிறந்த அக்டோபர் 2 ஆம் நாள் மட்டும் ஒரு குறுகிய துளையின் வழியாக அஸ்தி கலசத்தின் மீது சூரியக் கதிர்கள் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது. கடலில் கால் நனைக்கும் முன் அகிம்சை அண்ணலை ஞாபகம் கொள்ளுங்கள்.
காமராசர் நினைவாலயம்

எளிய குடும்பத்தில் பிறந்து, முதல்வராக உயர்ந்தவர் பெருந்தலைவர் காமராசர். மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய பள்ளிக் குழந்தைகளின் வாழ்வில் கல்வி விளக்கை ஏற்றியவர் கர்மவீரர். படிக்காத மேதை என்று தமிழக மக்களால் புகழப்பட்ட மக்கள் தலைவர் காமராசரின் நினைவாலயம். இது 2000 அக்டோபர் 2 ஆம் தேதி திறந்து வைக்கபட்டது.
ஜீவா மணி மண்டபம்

ஜீவா எனப்படும் ப.ஜீவானந்தம் எளிமையான தலைவர். தமிழகத்தில் மார்க்சிய இயக்கம் வளரக் காரணமாக இருந்த மார்க்சிய இயக்க முன்னோடி. தாமரை, ஜனசக்தி போன்ற பத்திரிகைகளின் வாயிலாகப் பொதுவுடமை. கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றவர். தமிழ் இலக்கியத்தில் புலமை மிக்கவர். சென்னை வண்ணாரப்பேட்டையின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். சிறந்த நாடாளுமன்றவாதி. இந்த அரிய தலைவரை பெருமைப்படுத்தும் விதமாக ஏப்ரல் 18, 1998 இல் நாகர்கோயிலில் இந்த நினைவாலயம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு அவரது உருவச்சிலை வாழ்க்கையைச் சித்திரிக்கும் நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
செய்குத்தம்பி பாவலர் நினைவாலயம்

நாகர்கோவில் அருகே கோட்டாறு வட்டாரத்தை சேர்ந்த இடலாக்குடி கிராமத்தை உங்களுக்குத் தெரியுமா? இங்குதான் செய்குத்தம்பி பாவலர் 31 ஜூலை 1874இல் பிறந்தார். 1907இல் சதாவதான நிகழ்ச்சியை நடத்திப் பலரின் பாராட்டையும் பெற்றார். இந்த அறிஞருக்கு மரியாதை செய்யும் விதத்தில் நினைவாலயம் ஒன்று 1987 செப்டம்பர் 26இல் திறந்து வைக்கப்பட்டது. இந்திய விடுதலைப் போரில் கலந்துகொண்ட இந்தப் பாவலரின் நினைவாலயம் பார்ப்பது நமக்குப் பெருமை.
வேலுத்தம்பி தளவாய் நினைவாலயம்

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர்புரிந்த மாவீரன் தளவாய் வேலுத்தம்பியின் நினைவாயலம் கல்குளம் வட்டத்திலுள்ள குக்கிராமமான தல்லாகுளம்தான். இந்த மாவீரன் பிறந்த தொட்டில்பூமி. இவரது வீட்டை ஆங்கிலேயர்கள் இடித்து விட்டார்கள். ஆனால் அவரது உடன் பிறந்தவர்கள் அந்த வீட்டைக் கட்டினர். இப்போது இவ்வீட்டில் தளவாய் வேலுத்தம்பி நினைவாக அவர் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரியிலிருந்து 30 கி.மீ. பயணித்தால் தல்லாகுளத்தை அடையலாம்.
சங்குத்துறை கடற்கரை

நகர மக்களின் பொழுது போக்கு இடமாகத் திகழும் இடம் சங்குத்துறை. பூங்கா, கடலோர இருக்கைகள், சுடுமண், கூரை குடில்கள் சுற்றுலாப் பயணிகளின் மனங்கவரும் வசதிகள். நாகர்கோயிலிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த அழகுமிகு கடற்கரை.
சொத்தவிளை கடற்கரை

ஆழமற்ற தண்ணீரும் உயரமான மணற்குன்றுகளும் எங்கே பார்க்கமுடியும்? இளைப்பாற குடை போன்ற கூரைகள் தனி குடில்கள் உண்டு. எங்கே? கன்னியாகுமரியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் சொத்தவிளை கடற்கரைக்குச் செல்ல வேண்டும். இந்த மாவட்டத்தின் சிறந்த இயற்கைக் கடற்கரைகளில் இதுவும் ஒன்று. இப்பகுதி முழுவதையும் மேலிருந்து அழகாகக் காணும் வகையிலான காட்சிக் கோபுரம் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கடற்கரை சாலை வழியாக இங்கு நேராக வாகனத்தில் வரலாம். கடற்காற்றின் சுகத்தை அனுபவிக்கலாம்.
தேங்காய்ப்பட்டினம் கடற்கரை

தென்னந்தோப்புகள் நிறைந்த கடற்கரை கிராமம். இது பழங்காலத்தில் வெளிநாடுகளுடன் குறிப்பாக அரேபியாவோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. ஆற்றின் கழிமுகக் கரைகளில் தென்னந்தோப்புகள் சூழ அழகிய தாமிரபரணி இங்கு கடலில் சங்கமிக்கிறது. தென்னை மரங்கள் அணிவகுத்திருக்க இந்தக் காயலில் படகு சவாரி செய்யும் அனுபவம் தனிப்பரவசம். விளவங்கோடு வட்டம் பேயன்குளம் கிராம் அருகே மேற்குக் கடற்கரை சாலையில் தேங்காய்ப்பட்டினம் அமைந்துள்ளது. இந்தக் கடலோர கிராமத்தை கண்டுகளிக்க நாகர்கோவிலிருந்து 35 கி.மீ. பயணம் செய்ய வேண்டும்.
தெக்குறிச்சி கடற்கரை

ஓர் அமைதியான கடற்கரையைக் கொண்ட கடலோர குட்டி கிராமம் தெக்குறிச்சி. சவுக்கு மரங்களின் வரிசையில் கடலைப் பார்ப்பது கவின்மிகு அனுபவம். சுற்றிப் பார்க்க சிறந்த இடம் என்ற பெயர் சுற்றுலாப் பயணிகளிடம் உண்டு. மேற்குக் கடற்கரை சாலையில் உள்ளது.
திரிவேணி சங்கமம்

முக்கடல் சங்கமம், வங்கக் கடல், அரபிக் கடல், இந்துமாக் கடல் என முக்கூடலும் சங்கமிக்கும் புனித நீர்த்தலம். குமரிக்குச் செல்கிறவர்கள் சங்கமத்தை தரிசிக்காமல் திரும்பக் கூடாது.
