
அனில் அம்பானி தலைமையிலான, ஆர்.காம்., எனறு அழைக்கப்படும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம், இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி கடன் தொகை, 26 ஆயிரம் கோடி ரூபாய் என அறிவித்துள்ளது.

ஆனால், திவால் என்ற நடவடிக்கைக்கு சென்றுவிட்ட, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய இந்திய வங்கிகள் உள்ளிட்டவை, 85 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் தர வேண்டும் என அறிவித்துள்ளன. இதனையடுத்து, இந்திய வங்கிகளை அனில் அம்பானி ஏமாற்றுகிறாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்வதற்கு முன், கடன் கொடுத்தவர்களால் நியமிக்கப்பட்ட வல்லுனர்களால் சான்றளிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் படி, கடன் தொகை, 26 ஆயிரம் கோடி ரூபாய் என, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது.

ஆனால், கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு, 49 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கபட்டது என்றும். மேலும், ரிலையன்ஸ் டெலிகாமுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கபட்டது என்றும், ரிலையன்ஸ் இன்ப்ரா டெல் நிறுவனத்துக்கு, 12 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் வழங்கபட்டதாகவும், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் அறிவித்துள்ளன. இதை சார்ந்து அனில் அம்பானி மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது எனபது கேள்விக்குறியாகவே உள்ளது.