நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு, சீமான் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் கூறும்போது
நடிகர் ரஜினிகாந்தும் அவரது குடும்பத்தினரும் கருதுவதுபோல் அவரது உடல்நலன், மன அமைதி, நிம்மதி முதன்மையானது. அதை விரும்பியே அவருக்கு அரசியல் வேண்டாம் என பலமுறை கருத்துகளை பதிவு செய்திருக்கிறேன். கடந்த காலங்களில் ரஜினிகாந்த் மீது பெரும் மதிப்பு வைத்திருந்த ரசிகன் நான்.
அரசியல் ரீதியாக வரும்போது அவர் மீது கடுமையான விமர்சனங்களை கடும் சொற்களை பயன்படுத்தி இருக்கலாம். அது அவரையோ, அவரது குடும்பத்தினரையோ, ரசிகர்களையோ காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இனி எப்போதும் எங்களுடைய பெரும் புகழ்ச்சிக்குரியவர். அவர், ஆகப்பெரும் திரை ஆளுமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆசிய கண்டம் முழுமைக்கும் அவரது புகழ் வெளிச்சம் பரவிக் கிடக்கிறது. தமிழ் மக்கள் பெரிதும் அவரை கொண்டாடுகிறார்கள். நாம் தமிழர் பிள்ளைகளும் அவரை கொண்டாடுவார்கள். அரசியல் ரஜினிக்கு தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். இப்போது அவர் எடுத்திருக்கும் முடிவை மதிக்கிறேன். பாராட்டுகிறேன்.
நான் எதிர்த்ததால் அரசியல் முடிவை கைவிட்டுவிட்டதாக நான் எண்ணவில்லை. ஆனால் எப்படியிருந்தாலும் நடிகர் ரஜினிகாந்தின் முடிவு வரவேற்கத்தக்கது. நடிகர்கள் அரசியலுக்கு வரட்டும். மக்களுக்கு சேவை செய்யட்டும். ஆனால் எடுத்தவுடனே திரைப்புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி தேர்தலில் நிற்பது என்பதுதான் கோபத்தை வரவழைக்கிறது என்று திரு சீமான் அவர்கள் கூறியுள்ளார்.