
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் விராத் கோலி, ஆகியோர் ஐசிசியின் உயரிய விருதுகளை வென்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி, கடைசி 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.

அதாவது, கிரிக்கெட்டில் உள்ள மூன்றுவித போட்டிகளான ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20-யில் சென்ற 2011-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை சிறந்த பங்களிப்பை ஆற்றிய வீரர்களை சிறப்பிக்கும் வகையில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாக்குகளை இணையம் வாயிலாக பதிவு செய்து வந்த நிலையில், இந்த விருதுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நடப்பு ஆண்டின் (2011 – 2020) சிறந்த வீரராக இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், ஒட்டுமொத்தமாக, கடைசி 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான “சர் கார்பீல்ட் சோபர்ஸ்” விருதையும் கோலி தட்டிச்சென்றுள்ளார்.

சமீபத்தில் அனைத்துவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுப்பெற்றிருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, களத்தில் விளையாட்டு தர்மத்தை வெளிப்படுத்தியதை, பாராட்டும் வகையில் செயல்பட்டதால், அவருக்கு “ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்” என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது,சென்ற 2011-ஆம் ஆண்டு இந்தியா – இங்கிலாந்துக்கு இடையே நாட்டிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, இங்கிலாந்து வீரர் இயான் பெல் தவறான தீர்ப்பால் வெளியேறினார். ஆனால், அப்போது தோனி அவரை அழைத்து விளையாட வைத்தார். அதை பாராட்டும் வகையிலேயே அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டு சிறப்பித்துள்ளது ஐசிசி.

கடைசி 10 ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் தட்டிச்சென்றார். டி20 கிரிக்கெட்டில் தொடக்கத்தில் இருந்தே பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் இந்திய அணியின் வீரர் ரோகித் ஷர்மாவுக்கு இந்த விருது கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ரஷீத் கான் இதனை வென்று அனைவரையும் ஆச்சரிய படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ரஷீத் கான், “ஆப்கானிஸ்தானில் இருந்து ஒருவர் இந்த விருதைப் பெறுவது எனக்கு ஒரு சிறப்பு வாய்ந்த தருணம்” என்று அறிவித்துள்ளார். மேலும் கடைசி 10 ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வென்றுள்ளார். இந்த பிரிவில், இந்திய அணியின் வீரர்களான விராத் கோலி, அஸ்வின் ஆகியோருடன் போட்டியிட்ட ஸ்மித் இறுதியில் அந்த விருதை வென்றுள்ளார். மகளிர் கிரிக்கெட் பிரிவில் சிறந்த ஒருநாள் மற்றும் டி20, சிறந்த கிரிக்கெட் வீராங்கனை என மூன்று விருதுகளையும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டரான எலிஸ் பெர்ரி தட்டிச்சென்று மிகப்பெரும் வியப்பளித்துள்ளார்.