அனைத்து உயிர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டாமல், மகிழ்வுந்து உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் முன்பக்கம் பொருத்திய பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும். அப்படி அகற்றா விட்டால், ரூபாய்.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு 4 சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களும் ஒரு மிக முக்கிய காரணமாக உள்ளது. எனவே, கார் உள்ளிட்ட 4 சக்கர மகிழ்வுந்து வாகனங்களில் முன்பக்க பம்பர்களை பொருத்தக் கூடாது என மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சகம் சென்ற 2017-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.
ஆனால், கார்களை வாங்கும் பெரும்பாலானோர், கார் விபத்தில் சிக்கும்போது காருக்கு எந்த சேதாரம் ஏற்பட்டு விட கூடாது எனபதற்காக “கிராஷ் கார்டு” எனப்படும் முன்பக்க பம்பரை பொருத்துகின்றனர். அதே நேரம், சாலைவிபத்துகளின் போது உயிர்கள் அடிபட்டு மரணமடைய இந்த பம்பர்களும் மிக முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது என்பது பற்றி பெரும்பாலானோருக்குத் தெரிவது இல்லை.
எனவே, சாலை வாகன விதிகளை மீறி முன்பக்க பம்பர் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், வாகன ஆய்வாளர்கள் என அனைவரும் அதிரடி சோதனை நடத்தி வரு கின்றனர். இதுதொடர்பாக போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் கூறும்போது, ஒவ்வொரு வகை வாகனமும் தயாரிக்கும் முன்பே, அவசியமான வடிவமைப்பு குறித்து ஆராய்ச்சி செய்த பிறகே, தயாரிக்கப்படுகின்றன. ஆனால், வாகன உரிமையாளர்கள் சிலர், வாகனங்களில் கூடுதலாக தங்கள் கார்களின் பாதுகாப்பு வசதிக்காக முன்பக்க பம்பரை பொருத்துகின்றனர்.
வாகனங்களில் பம்பர் போன்றவற்றைப் பொருத்த போக்குவரத்து துறை தடை செய்துள்ளது. சாலை விபத்து ஏற்பட்டால், உயிரிழப்பு ஏற்படுவதற்கு அந்த வாகனங்களில் பொருத்தியுள்ள பம்பரும் முக்கிய காரணமாக அமைக்கின்றது. இதுதவிர, பாதசாரிகளுக்கும், இதர வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே,வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள முன்பக்க பம்பர்களை உடனே அகற்ற வேண்டும்.
அவவாறு அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஆய்வாளர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள், என அனைவரும் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு போக்குவரத்து சட்டத்தின்படி ஆறு மாத காலம் சிறை தண்டணை அல்லது ரூபாய்.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பம்பர் குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் ஒருவர் கூறும்போது, சாலைகளில் வாகனத்தில் பயணம் செய்யும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால், வாகனங்கள் சேதமடைந்தாலும், பயணிப்போரின் உயிரைக் காப்பாற்றும் வகையில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கார் போன்ற வாகனங்களின் முன்பகுதிகளில் பம்பர் பொருத்துவதால், வாகனங்கள் மோதும் அதேவேகத்தில் உள்ளே இருப்பவர்களுக்கும் பலத்த காயமோ, உயிரிழப்போ ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காரில் “ஏர்பேக்’ வசதியுள்ளவாகனங்கள் விபத்தில் சிக்கும்போது, “ஏர் பேக்” விரிவடைவதை முன்பக்க பம்பர் மட்டட்ப்பட்டால் அந்த பம்பார் அதை தடுத்து விடுகிறது. இதனால் உயிரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். காரின் முன்பக்கமானது, உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை நாம் மாற்றி அமைத்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்புகள் உள்ளது என்று கூறியுள்ளார்.
சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ இதுகுறித்து கூறும்போது, நான்கு சக்கர வாகனங்களில் முன்பக்க பம்பர்களை அகற்ற வேண்டும் என்றுபோக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மேலும், ஏர்பேக் இல்லாத வாகனங்களில் மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து கூறியுள்ளார்.