
தமிழகத்தின் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.2500 பணம் வழங்கப்படும். ஒரு முழு கரும்பு, அரிசி, வெல்லம், உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் துணி பை ஆகியவை பொங்கல் திருநாள் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சேலத்தில் அறிவித்துள்ளார்.

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பும் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். வரும் ஜனவரி மாதம் 4-ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு மற்றும் ரூ.2500 பணம் பெற்றுக்கொள்ளலாம். இதனால் தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 இலட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்து இருந்தார். நேற்று இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், வரும் டிசம்பர் 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும். பொங்கல் பரிசுத்தொகுப்பை ஜனவரி மாதம் 4-ஆம் தேதியிலிருந்து துவங்கி, ஜனவரி மாதம் 13-ஆம் தேதிக்குள் விநியோகம் செய்ய வேண்டும். நாளொன்றுக்கு 200 பேர் வீதம் பொங்கல் பரிசு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் விநியோகம் செய்யலாம் என்று தமிழக அரசு மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் கழகத்திற்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.