நாம் தமிழர் கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சிங்களப் பேரினவாத அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து 2010-ஆம் ஆண்டுச் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் “நீ என் மீனவனை அடித்தால், நான் உன் மாணவனை அடிப்பேன்” என்று பேசியதற்காகத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.
பின்பு, அந்த வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் செல்லாது என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். பிறகு அதே ஆர்ப்பாட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி 10 நிமிடம் அதிகம் பேசியதாகச் சென்னை மாநகரக் காவல்துறையால் 2018-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கின் விசாரணைக்காக இன்று (23-12-2020) காலை 10 மணியளவில் சென்னை ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் நேர் நின்றார்.
அதன் பின்னர் வெளியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ” 2021-ஆம் ஆண்டு வார இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினி, கமலை மக்கள் அடிக்கிற அடியில் இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணமே வரக்கூடாது. நடிப்பது மட்டுமே நாடாளுவதற்கான தகுதி என்பதை இந்த தேர்தலோடு மறந்து விட வேண்டும் ” என்று தெரிவித்தார் என்று அக்கட்சியின் தலைமை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.