ஐ.பி.எல் ஆட்டங்களில் மிகச்சிறப்பாக ஆடிய தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், தற்போதைய இந்திய அணியின் டி20(T20) மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இந்த நிலையில் நடராஜன் தனக்கு பிறந்த முதல் குழந்தையை இன்னும் பார்க்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அறிவித்துள்ளார். பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், “ஐ.பி.ல் டி20(T20) ஆட்டங்களில் அறிமுகமாகி தனது அற்புதமான திறமையால் அணியில் இடம்பிடித்துள்ள நடராஜன், ஐ.பி.எல் பிளே-ஆப் ஆட்டங்களின் போது முதல் முறையாக தந்தையானார்.
நடராஜன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலிய நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு இந்திய அணியில் இடமும் கிடைத்தது. டி20(T20) மற்றும் ஒரு நாள் ஆட்டங்களில் தனது மிகச் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதினால், டெஸ்ட் தொடருக்கான போட்டிகளுக்காகவும் அவர் அங்கேயே தங்க வைக்கப்பட்டார். இந்திய அணியில் ஆடும் ஒருவராக அவர் இல்லை என்றாலும், வலையப்பயிற்சி பந்துவீச்சாளராக அவர் தற்போது இருந்து வருகிறார். ஒரு வகையில் ஆட்டத்தின் வெற்றியாளர், இன்னொரு வகையில் ஆட்டத்தின் பயிற்சியாளராகவும் வீரர் நடராஜன் இருந்து வருகிறார்
வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் தான் டெஸ்ட் தொடர் முடியும். அப்போதுதான் நடராஜன் தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியும். அவர் ஊருக்கு திரும்பிய பின்பு தான் அவர் அவரது மகளை முதல் முறையாக காண முடியும். ஆனால், தன்னுடைய முதல் குழந்தை பிறப்பதை காண்பதற்காகவே, முதல் டெஸ்ட்டுக்கு பிறகே ஊருக்கு திரும்பி இருக்கிறார் தற்போதைய இந்திய அணியின் கேப்டன். இதுதான் இந்திய கிரிக்கெட், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விதிமுறைகள்” என்று அந்தக் கட்டுரையில் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அழுத்தமாக எழுதியுள்ளார்.