
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் வரும் 4 முதல் 6 மாதங்கள் மிக மோசமாக இருக்கும் என மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசியை உருவாக்குவதிலும், விநியோகிப்பதிலும் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவரான பில் கேட்ஸ் இதுபோன்ற தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவும் என்று 2015-ஆம் ஆண்டே எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில், அவர் சி.என்.என்(CNN) தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும், இந்த நோய்த்தொற்றுப் பரவல் அடுத்து வரும் 4 முதல் 6 மாதங்களுக்கு மிக மோசமானதாக இருக்கக்கூடும். சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம், கொரோனாவால் மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறக்கக்கூடும் என கணித்துள்ளது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற விதிமுறைகளைப் பின்பற்றினால் இறப்பு விகிதத்தைப் நாம் பெருமளவு தவிர்க்கலாம். இதைக் கையாள அமெரிக்கா சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் 2015-ஆம் ஆண்டு, நான் எச்சரித்தபோது இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் எனக் கூறினேன். இந்த வைரஸ் அதைவிட பெரும் ஆபத்தானது. நாம் மிக மோசமான நிலையை தற்போது அடையவில்லை. ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன்னர் நான் கணித்ததைவிட அமெரிக்கா மற்றும் உலகெங்கும் உள்ள நாடுகளில் பெரும் பொருளாதாரத் தாக்கம் ஏற்பட்டுள்ளது இது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான ஆராய்ச்சிக்காக எனது அறக்கட்டளை ஏராளமான நிதியை வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி பிற நாடுகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்க மக்களுக்கு வழங்க முன்னுரிமை அளிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மனிதகுலம் அனைத்துக்கும் அமெரிக்கா உதவ வேண்டும்.

கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அதை பகிரங்கமாக போட்டுக்கொள்வதாக முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா ஆகியோர் தெரிவித்துள்ளனர். அவர்களைப் போலவே நானும் பகிரங்கமாக தடுப்பூசியை போட்டுக் கொள்வேன். கரோனா தடுப்பூசியானது பணத்துக்காக அல்லாமல் தேவைக்கேற்ப கிடைக்க வேண்டும் என்றுள்ளார் பில் கேட்ஸ்.