கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்ற மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. சென்ற நவம்பர் 16-ஆம் தேதி, 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதனடிப்படையில் பள்ளிகள் திறப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
கொரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளில், “கல்வித் தொலைக்காட்சி” வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள் ஒன்றாம் வாகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை 50 சதவீதமும், 10 ,11, மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் எனவும் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, “அரையாண்டு தேர்வில் வரும் மதிப்பெண்களை வைத்து, மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்கக்கூடாது. நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்த வேண்டும். தேர்வுக்காக தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது” என்றும் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.