
மத்திய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அந்த வேளாண் சட்ட நகல்களை பியித்தெறிந்தார்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் இந்திய விவசாயிகள் திரளானோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள டெல்லி அரசு, போராட்டங்களில் ஈடுபட்டு வருவோருக்கு குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தையும் டெல்லி மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆங்கிலேயேர்களை விட மிக மோசமாக மத்திய பாஜக அரசு மாறிவிடக் கூடாது என்று குறிப்பிட்டார். எனவேதான் ஒவ்வொரு விவசாயியும் பகத் சிங்கைப் போல மாறி போராடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உரையாற்றிக் கொண்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திடீரென்று ஒரு கட்டத்தில் மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களின் நகல்களை பியித்தெறிந்து தனது முழு எதிர்ப்பையும் அங்கு வெளிப்படுத்தினார்.