தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சென்ற 23 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வந்தனர். அம்மையார் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த கோரிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுத்தது. இதைத்தொடர்ந்து சென்ற 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் நடத்தினார்.
அப்போது தான் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை வெளியிட்டு, ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்து வந்தது. நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் எந்த முடிவையும் அறிவிக்காமல் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தன் மவுனத்தையே பரிசாக தந்தார்.
அவ்வப்போது, மத்திய அரசுக்கு ஆதரவாக சில கருத்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்து வந்ததால் அவர் கட்சியை தொடங்கினாலும், பா.ஜ.க.வுடன் இணைந்தே செயல்படுவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. #மாத்துவோம்எல்லாத்தையும்மாத்துவோம் இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே உறுதிப்படுத்தினார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் கட்சித் துவக்கம் பற்றி, டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பு என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, #மாத்துவோம்எல்லாத்தையும்மாத்துவோம் #இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டாக்குகளும் இடம் பெற்று இருந்தன இதுபற்றி அவரது டுவிட்டரில் வெளியிடப்பட்ட மற்றொரு செய்தியில், வர போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.
அற்புதம்… அதிசயம்… நிகழும்!!! என்றும் தெரிவித்து இருந்தார். #இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்ல, என்ற நடிகர் ரஜினியின் அரசியல் அறிவிப்பு ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகியது ரஜினியின் அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனா மூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது, தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி, அதில் தோற்றால் அது மக்களின் தோல்வி என்றே அர்த்தம். என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன் அரசியல் மாற்றம் தேவை, கட்டாயம் நிகழும் என கூறினார்.
இந்த அறிவிப்பு தமிழகத்தில் உள்ள பல லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி ஏராளமான திரையுலகினரையும் உற்சாகப்படுத்தியது. கட்சியை பதிவு செய்யும் பணிகளை ரஜினிகாந்த் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர். மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என ஒட்டு மொத்தமாக 2 லட்சம் நிர்வாகிகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினியின் உத்தரவின் பேரில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. . அதன்படி பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டன. அதிமுக மற்றும் திமுக-வில் இருக்கும் சில மூத்த தலைவர்களும் ரஜினியுடன் கைகோர்க்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ராசியான ராகவேந்திரா மண்டபத்தையே ரஜினிகாந்த் கட்சி அலுவலகமாக மாற்ற திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக கட்சியின் கொள்கை, நிர்வாக அமைப்பு உள்ளிட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.கட்சியின் பெயர் என்ன…? கட்சிக்கு ரஜினி என்ன பெயர் வைக்கப் போகிறார், கட்சிக் கொடியின் நிறம் என்ன, அதில் இடம்பெறும் சின்னம் என்ன என்பது குறித்த விவாதங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டன. அந்த வகையில் ‘படை’ என்று முடியும் வகையில் ரஜினியின் கட்சி பெயர் அமையலாம் என்றும், கொடியில் பாபா முத்திரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அனைத்து தொகுதிகளிலும் களம் காணுவதாக அறிவித்துள்ள ரஜினி,அம்ம மக்கள் முன்னேற்றகழகம் டிடிவி தினகரன் கோரியது போன்று பொதுவான சின்னத்தை கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சின்னமாக எதை தேர்வு செய்யலாம் என்று ரஜினி ஆலோசனை நடத்தி உள்ளார். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட ரஜினிகாந்த் தனது ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சியான மக்கள் சேவை கட்சியைப் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
முதலில் தேர்தல் ஆணையத்தில், அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம் என்று பதிவு செய்யப்பட்ட இந்த கட்சி, இரண்டு மற்றும் ஒரு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தேர்தல் ஆணைய அறிவிப்பின் மூலம் “மக்கள் சேவை கட்சி” என்று மறுபெயரிடப்பட்டு உள்ளது. தேர்தல் சின்னமாக “ஆட்டோ ரிக்ஷா” இருக்க அதிகமான சாத்தியகூறுகள் உள்ளன. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்தபோது மன்ற கொடியையும் அதன் சின்னமாக “பாபா” படத்தில் பிரபலமடைந்த “பாபா முத்திரை”-யையும் அறிமுகப்படுத்தினார். ரசிகர்கள் மத்தியில் பாபா முத்திரை பிரபலமானது. சைக்கிள் சின்னம் கேட்கலாம் என்றும் யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. “அண்ணாமலை” படத்தில் பால்காரர் பாத்திரத்தில் சைக்கிளில் வலம் வருவார் ரஜினி. அதுவும் மக்களிடம் பிரபலமானதுதான்.ஏற்கனவே சைக்கிள் சின்னம் த.மா.கா.-விடம் இருந்தது. பின்னர் அந்த சின்னம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சைக்கிளா…?ஆட்டோ ரிக்ஷாவா?… பாபா முத்திரையா?…!!!!!, தமிழ் நாட்டு மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் களமிறங்க வேட்பாளர்களுக்கு பொதுவான தேர்தல் சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மக்கள் சேவை கட்சி விண்ணப்பித்து உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. விண்ணப்பத்தில் ரஜினிகாந்தின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் வேறு நபர்மூலம் விண்ணப்பம் அளிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் சின்னத்திற்கான முதல் விருப்பமாக ரஜினிகாந்த் தனது 2002 திரைப்படமான பாபா-வில் புகழ் பெற்ற “இரு விரல்” பாபா முத்திரையை பட்டியலிடப்பட்டு உள்ளது, அதே நேரத்தில் அவரது 1995 பிளாக்பஸ்டர் “பாஷா”-வை நினைவூட்டும்‘ “ஆட்டோ ரிக்ஷா”-வை இரண்டாவது முன்னுரிமை சின்னமாக பட்டியலிடப்பட்டுள்ளது அதனுடம் சைக்கிளும் இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.
தேர்தல் அணையத்திடம் வளங்கியுள்ள விண்ணப்பம் செயல்பாட்டில் உள்ளது என ஒரு ஆதாரம் கூறுகிறது. ரஜினிகாந்த் கேட்டு உள்ள “இரு விரல் சின்னம்” இந்திய தேசிய காங்கிரஸின் “கை” சின்னத்துடன் ஒத்திருப்பதால், மக்கள் சேவை கட்சிக்கு “இரு விரல்” வாக்கெடுப்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.