இந்தியாவின் கர்நாடக மாநிலதின் தலைநகரான பெங்களூரில் ஐ-போன் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டதால், ஆத்திரம் அடைந்த அந்த நிறுவன ஊழியர்கள் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை அடுத்துள்ள நரசாப்புராவில் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் ஐ-போன் தொழிற்சாலை இயங்கி வருகிறது. 43 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த தொழிற்சாலையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வேலை முடிந்து வெளியே வந்த ஊழியர்கள் திடீரென்று தொழிற்சாலை அலுவலகத்தின் கண்ணாடி கதவுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் மேஜை, நாற்காலி, கணினி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் உடைத்த ஊழியர்கள் அங்கு இருந்த வாகனங்களுக்கு தீ வைக்கவும் முயற்சித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த நரசாப்புரா காவல் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து ஊழியர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து ஊழியர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது, விலை உயர்ந்த செல்போன்களை விற்கும் ஆப்பிள் ஐ-போன் நிறுவனம் ஊழியர்களுக்கு முறையான ஊதியத்தை வழங்குவதில்லை.
பொறியியல் பட்டதாரிகளை பணியில் சேர்த்த போது மாதம் ரூபாய்.21 ஆயிரம் ஊதியம் வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் அடுத்த மூன்று மாதங்களில் ஊதியம் ரூ.16 ஆயிரமாக குறைக்கப்பட்டது. 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.12 ஆயிரம் ஊதியத்தை ரூ.8 ஆயிரமாக குறைத்தனர். இந்த ஊதியமும் கடந்த மூன்று மாதங்களாக முறையாக வழங்காமல் காலம் தாழ்த்தி, இரு தவணைகளாக வழங்கினர்.
இதுகுறித்து அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் இந்த மாதம் குறைவான ஊதியமே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதை அறிந்த ஊழியர்கள் கொதிப் படைந்தனர். இதனால் தொழிற்சாலை வாசலில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டனர், என தெரிவித்தனர். பொறியியல் பட்டதாரிகளை பணியில் சேர்த்த போது மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்குவதாக தெரிவித்துவிட்டு. ஆனால் அடுத்த மூன்று மாதங்களில் ஊதியம் ரூ.16 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாகவே, நிறுவன ஊழியர்களால் அடித்து நொறுக்கபட்டுள்ள அந்த சம்பவம் தற்போது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.