புதிய கதைக் கருவைப் படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்ததாகவும், ஸ்ட்ரீமிங் தளத்தில் ஒரு படைப்பு எனும்போது தனது வழக்கமான வட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று நினைத்ததாகவும் இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ்(NetFlix) ஓடிடி(OTT) தளத்தில் “பாவக் கதைகள்” என்கிற ஆந்தாலஜி திரைப்படம் வெளியாகிறது. கௌதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் என நான்கு இயக்குநர்கள், இதில் நான்கு குறும்படங்களை இயக்கியுள்ளனர்.

ஆணவக் கொலைகளை வைத்தே இந்தக் குறும்படத் தொகுப்பானது எடுக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் ஓர் இரவு குறும்படத்தைப் பற்றிப் பேசுகையில், “தயாரிப்பாளர் ஆஷி துவா ஆந்தாலஜி எடுக்க வேண்டும் என்று என்னிடம் அணுகியபோது நான் உடனடியாக ஒப்புக் கொண்டேன்.

ஆனால், ஒரு காதல் கதையை எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஜனரஞ்சகப் படத்தை எடுக்கும் இயக்குநர்களாகிய எங்களின் திரைப்படங்கள் அனைத்திலும் ஒரு காதல் கதை இருக்கிறது. எனவே, நாங்கள் புதிதாக ஒன்றைத் தேட வேண்டும் என்று நினைக்கிறோம். எங்களக்குச் சவுகரியமான வட்டத்திலிருந்து வெளியே வந்து அதைத் தாண்டி யோசிக்க வேண்டும் என்று நினைத்தோம். வணிக ரீதியான திரைப்படங்களில் எங்களால் செய்ய முடியாத செயல்களை செய்ய வேண்டும் என்று விரும்பினோம்.

தெலுங்கில் இதேபோல ஒரு ஆந்தாலஜியில் குடும்ப கவுரவம், ஆணவக் கொலைகளை வைத்துத் தயாரித்து வருவதாக, ஆஷி எங்களிடம் கூறினார். எங்களுக்கும் அந்த யோசனை பிடித்தது. எனவே அதைவைத்தே எடுக்கலாம் என்று முடிவெடுத்தோம்” என்று கூறியுள்ளார். மேலும் இந்த டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி “பாவக் கதைகள்” நெட்ஃபிளிக்ஸ்(NetFlix OTTT) தளத்தில் வெளியாகப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.