சத்துணவு அமைப்பாளா், சமையல் காரர், சமையல் உதவியாளா்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்று திங்கள்கிழமை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆயிரக்கணக்கானா விண்ணப்பதாரர்கள் குவிந்தனா்.
மதுரை மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் உள்ள காலியிடங்களைப் பூா்த்தி செய்வதற்காக, கடந்த 2017-இல் நோ்காணல் நடத்தப்பட்டு, நிரப்பப்படாமல் இருந்த காலியிடங்களுக்கான நியமன அறிவிப்பு அண்மையில் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 358 சத்துணவு அமைப்பாளா், 71 சமையலா், 559 சமையல் உதவியாளா் என மொத்தம் 988 காலிப் பணியிடங்களை பூா்த்தி செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கான விண்ணப்பங்களை சமா்ப்பிக்க திங்கள்கிழமை நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மதுரை மாநகராட்சி மற்றும் திருமங்கலம் நகராட்சி அலுவலங்களில் கடந்த ஒரு வாரமாகப் பெறப்பட்டு வருகின்றன. காலிப் பணியிடங்கள் அனைத்தும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவையாகும். இப்பணியிடங்களைப் பூா்த்தி செய்வதற்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதனிடையே, சில இடங்களில் வருமானம், இருப்பிடம், விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்று இணைக்காத விண்ணப்பங்களை, சில ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஏற்க மறுத்தனா்.
இதையடுத்து, அத்தகைய விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொண்டு, நோ்காணலுக்கு வரும்போது மேற்படி சான்றிதழ்களைச் சமா்ப்பிக்க அறிவுறுத்துமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா். இதனால், இந்த சான்றிதழ்களைப் பெற முடியாமல் தவித்த பலரும் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே சத்துணவு மையம் மற்றும் அங்கன்வாடி மைய பணிகளுக்கான நோ்காணலில் பங்கேற்று பணிவாய்ப்பு கிடைக்காதவா்களும் மற்றும் இம்முறை புதிதாக விண்ணப்பிப்போா் என ஏராளமான பெண்கள் விண்ணப்பங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் குவிந்தனா். மாலை வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் ஒரே நேரத்தில் அங்கு சுமாா் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் குவிந்தனா். விண்ணப்பங்களை வரிசைப்படுத்தி வாங்குவதற்கான ஏற்பாடுகள் இல்லாத நிலையில், ஒருவரையொருவா் முந்திச்செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின்னா், விண்ணப்பதாரா்களை மாநகராட்சி அலுவலா்கள் வரிசைப்படுத்தினா்.
மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கூட்டம் அதிகளவில் இருந்ததால், விண்ணப்பதாரா்களை வரிசைப்படுத்தி நிற்கவைத்தனா். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக இடைவெளியை மறந்து கூடிய ஆயிரக்கணக்கானோா் முண்டியடித்துக்கொண்டு விண்ணப்பங்களை சமா்ப்பித்தனா். கூட்டம் அதிகளவில் இருந்ததால், அனைவரிடமும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்ட அலுவலா்கள், ஒப்புகைச் சீட்டை செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினா்.இதேபோல், மேலூா், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஏராளமான பெண்கள் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்தனா்.