ஆந்திராவில் 200 பேருக்கு ஒரே அறிகுறிகளுடன் மர்ம நோய் ஒன்று தென்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை அங்கு ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலூர் நகரில், எந்த வித தொடர்பும் இல்லாதவர்களுக்கு ஒரே அறிகுறிகளுடன் கூடிய மர்ம நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாரும் ஒரே கூட்டத்திலோ, பொது இடத்திலோ சந்திக்கவில்லை. மேலும் ஒவ்வொருவரும், எலூரின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
200 பேருக்கும் அதிகமானோர் தற்போது வரை எலூர் அரசு மருத்துவமனையில் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ நிபுணர்கள் எலூருக்குச் சென்று இது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தற்காலிகமாக மயங்கி விழுகின்றனர். அதன் பின் வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
இதில், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் வெவ்வேறு வயதுடையவர்களாக உள்ளனர். அவர்களில், 6 வயது சிறுமி மேல்சிகிச்சைக்காக விஜயவாடா மருதுவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆந்திராவின் சுகாதாரத்துறை அமைச்சர் அல்லா நானி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
எலூர் மாவட்டம் முழுவதும் நோய்ப் பாதிப்பு குறித்த கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சிறப்பு முகாம்கங்கள் அமைக்கப்பட்டுப் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்து நோயாளிகளுக்கும் மயக்கம் ஏற்படுதல், கீழே விழுதல், உடல் நடுக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி கே.சுனந்தா அறிவித்துள்ளார்.