
இந்த மாதம் 10-ஆம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான பணிகளை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். உத்தேசமாக 2022 -ஆம் ஆண்டு இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்தான் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என்று மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
சுமார் 2000-2500 பேர் நேரடியாகவும், 9000-10000 பேர் மறைமுகமாகவும் இந்த கட்டுமான பணிகளில் ஈடுபட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை அப்படியே அச்செடுத்ததை போல புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. சுமார் 64500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிக்கு 971 கோடி ரூபாய் செலவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தை தாங்க கூடிய வகையில் இந்த புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது.

அடித்தளம், தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகள் கொண்ட மேல் தளம் புதிய நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட உள்ளது. அதே போல உறுப்பினர்களின் எண்ணிக்கையை மனதில் கொண்டு அதிகளவிலான உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் அவை கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் இட வசதியோடு கட்டப்பட இருகிறது. ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் மூலம் முழுவதும் உள்ளூர் தொழிலாளர்களை கொண்டே இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காகித பயன்பாடு இன்றி டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் துணையோடு நாடாளுமன்றம் இயங்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூலகம், உறுப்பினர்கள் அமர்ந்து பேசுவதற்கான் இட வசதி, நெருக்கடி இல்லாத வாகன நிறுத்துமிட வசதிகளும் புதிய கட்டிடத்தில் ஏற்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது. புதிய கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் பழைய நாடாளுமன்ற கட்டிடம் இதர அலுவல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கட்டுமான பனியின் போது காற்று மாசுபடுதலையும் மற்றும் ஒலியின் பாதிப்புகளையும் கவனத்தில் கொண்டு கட்டப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.