
புதிதாக ஒரு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாக்கப்பட்டு, அதன் நிர்வாகிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட திரையுலகில் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்து வரும் சங்கம் என்றால், அது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் தான். இந்தச் சங்கத்திலிருந்து தற்போது படங்கள் தயாரித்து வரும் ஒரு சில தயாரிப்பாளர்கள் பிரிந்து “தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்” என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளார்கள்.

இதற்குத் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. இதனிடையே, சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் தேனாண்டாள் முரளி அணியினர் வெற்றி பெற்றுப் பொறுப்புக்கு வந்துள்ளனர். அந்தத் தேர்தலில் முரளி அணிக்கு எதிராகக் களத்திலிருந்த நடிகரும் தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் அணியினர், தற்போது புதிதாக ஒரு தயாரிப்பாளர்கள் சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.
இதற்கு “தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்” என்று பெயரிட்டுள்ளனர். இதன் அறிமுகக் கூட்டம் இன்று (டிசம்பர் 5-ஆம் தேதி) நடைபெற்றது. இந்த புதிய சங்கத்தின் தலைவராக நடிகரும் தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

செயலாளர்களாக சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜே.எஸ்.கே சதிஷ், பொருளாளராக கே.ராஜன், துணை தலைவர்களாக பி.டி.செல்வகுமார் மற்றும் ஆர்.சிங்கார வடிவேலன், இணை செயலாளர்களாக கே.ஜி.பாண்டியன், எம்.அசோக் சாம்ராஜ் மற்றும் சிகரம் ஆர்.சந்திர சேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய சங்க அறிவிப்பால் மீண்டும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. மேலும் இந்தச் சங்க அறிமுக விழாவில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள்
- புதிய, சிறிய படத்தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி உருவாக்க நினைக்கிறோம்
- வி.பி.எஃப் போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவினங்களை தவிர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க உறுதுணையாக இருப்போம்.
- திரையரங்குகளில் வெளியிட முடியாமல், சிக்கித் தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களை திரையிடுவதற்கு, புதிய, உரிய வழி காட்டுவோம்.
- எஃப்.எம்.எஸ், ஓடிடி, சாட்டிலைட் மற்றும் கேபிள் டி.வி வியாபாரத்தை பெருக்கி லாபம் ஓட்ட முயற்சி மேற்கொள்வோம்.
- பட வெளியீட்டின் போது ஏற்படும் பல வித சிக்கல்களை, இயன்றவரைச் சுமுகமாகப் பேசி தீர்க்க ஆவண செய்வோம்.

மேலும், இந்தச் சங்கத்தில் தஞ்சை சினி ஆர்ட்ஸ் உரிமையாளரான உஷா ராஜேந்தர், எஸ்.டி.ஆர் பிக்சர்ஸ் உரிமையாளரான சிலம்பரசன் ஆகியோர் இந்தச் சங்கத்தின் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.