
இந்திய மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் இந்திய விவசாயிகள் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக அந்த சட்டங்களை விலக்கிக் கொள்ள மத்திய பாரதிய ஜனதா அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் சினிமா நடிகரும், உழவன் அறக்கட்டளையின் நிறுவனருமான நடிகர் கார்த்தி. அது தொடர்பாக அவர் கடிதம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில் அவர்.
நாளும் நம் பசி தீர்க்க பாடுபடும் இந்திய நாட்டின் உழவர்கள், பெருந்திரளாக கடும் பனிப்பொழிவையும், கொரோனா அச்சத்தையும் பொறுப்படுத்தாமல் “உழவர்” என்ற ஒற்றை அடையாளத்துடன் தலைநகர் டெல்லியில் கடந்த ஒருவாரமாக வெட்டவெளியில் போராடி வருகின்றனர். விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும் பெரும்பங்கு என்ற வகையில் பெண்களும் பெருந்திரளாகப் அங்கு போய் போராடி வருவது வரலாறு காணாத நிகழ்வாக உலகம் முழுவதும் பிரமிப்பூட்டுகிறது,

நாளும், பொழுதும் உழைத்து பாடுபட்டால் தான் வாழ்க்கை என்ற நிலையில் தங்கள் மாடு, கழனி பயிர்களை அப்டியப்படியே போட்டுவிட்டு, குடும்பத்தாரைப் பிரிந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தொலைதூரம் பயணித்து வந்து தீரத்துடன் போராடி வரும் செய்திகள் இந்தியர்களாகிய நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் உலுக்குகிறது,

தண்ணீர் பற்றாக்குறை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் துயர்கள், விளைப் பொருள்களுக்கு உரிய விலையில்லாமை உள்ளிட்டப் பல பிரச்சனைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் உழவர் சமூகம்,சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களால் தாங்கள் இன்னும் மிக மோசமாக பதிப்படைவோம் என அவர்கள் கருதுகிறார்கள்.

தங்கள் மண்ணில் தங்களுக்கிருக்கும் உரிமையும், தங்கள் விளைப் பொருட்கள் மீது தங்களுக்கிருக்கும் சந்தை அதிகாரமும் பெரும் முதலாளிகள் கைகளுக்கு இந்த சட்டங்களால் மடைமாற்றம் செய்யப்பட்டு விடும் என்றும், ஆகவே இந்த சட்டங்களை விலக்கிக் கொள்ள வேண்டுமென்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.
ஆகவே, போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்த்து, அவர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து, உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு, அதை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம், என அதில் தெரிவித்துள்ளார் நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி.