சீனாவிற்கும் இந்தியாவிற்கும் உண்மையான எல்லைக்கோடு பகுதியிலும், பொருளாதார ரீதியாகவும் பிரச்சனைகள் நிலவி வரும் இவ்வேளையில், மீண்டும் 30 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அரிசியை சீனா இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு மறைமுகமாக பல தடைகளும், மேலும் சீன ஆப்களுக்கும் இந்திய அரசு தடைகளும் விதித்து, இந்திய மக்களிடையே சீனப் பொருள்களின் மேல் வெறுப்பு உண்டான வேளையில், இந்திய அரிசியை இறக்குமதி செய்ய சீனா எடுத்திருக்கும் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனா வழக்கமாக அரிசியை தங்களுக்கு இறக்குமதி செய்யும் நாடுகளில், அவர்களிடம் போதிய அளவு அரிசி சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இயலாததாலும், மேலும் இந்தியா தன்னுடைய அரிசியை தள்ளுபடி விலையில் அளித்ததும் இதற்கு ஒரு முக்கியமான காரணங்களாக இருக்கலாம். உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது.
சீனா தான் மிகப்பெரிய இறக்குமதியாளர். சீனா ஆண்டுக்கு 4 மில்லியன் டன் அரிசியை உலகெங்கிலும் இருந்து கொளுமுதல் செய்து இறக்குமதி செய்கிறது. ஆனால் இதுவரை இந்தியாவிலிருந்து வாங்குவதை தவிர்த்ததாகவே கூறப்படுகிறது. ஆனால் இந்த வருடம் தான் முதன் முறையாக இந்தியாவிடம் இருந்து அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கி உள்ளது. இது குறித்து கூறிய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.வி. கிருஷ்ணா ராவ், இந்திய பயிரின் அதிக தரத்தை பார்த்த சீனா அடுத்ததாக மேலும் அரிசி இறக்குமதியை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கிறார்.
இந்திய வர்த்தகர்கள் டிசம்பரிலிருந்து பிப்ரவரிவரை ஏற்றுமதியாக, ஒரு லட்சம் டன் அரிசியை ஒரு டன்னுக்கு 300 டாலர் என்ற அளவில் ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தில் உள்ளனர். சீனா வழக்கமாக தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அரிசி வாங்கிக்கொண்டு இருந்தது. இந்திய ஏற்றுமதியாளர்கள் வழங்கும் விலையுடன் ஒப்பிடுகையில் மேற்கண்ட நாடுகள் குறைந்தது ஒரு டன்னிற்கு 30 டாலர்களை அதிகம் கேட்கின்றனர். இதனால் இந்த வருடம் இந்தியாவில் இருந்து அரிசியை வாங்க வேண்டிய கட்டாயத்தில் சீன அரசாங்கம் உள்ளது. மேலும் ஜனவரி முதல் அக்டோபர் வரை உள்ள கால கட்டத்தில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 43 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசாங்க தரவுகளின் படி, இந்தியாவின் போட்டி ஏற்றுமதியாளர்கள் வறட்சி காரணமாக அவர்கள் ஏற்றுமதிகளை குறைத்துள்ளனர். 2020-ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் நாட்டின் அரிசி ஏற்றுமதி 11.15 மில்லியன் டன்கள் ஆகும்.ஒரு வருடத்திற்கு முன்னால் இருந்த 8.34 மில்லியன் டன் ஏற்றுமதியை விட இது மிகவும் அதிகமாகும். இதற்கு சில காரணங்கள் யூகிக்கப்படுகின்றன. உலக வர்த்தக மையத்தின் (WTO) மூலம் பல நாடுகளுடன் ஏற்றுமதி, இறக்குமதி ஒப்பந்தங்களில் சீனா ஈடுபட்டிருந்தாலும் இறக்குமதி விஷயத்தில் அவைகளை சரியாக இதுவரை பின்பற்றவில்லை. இறக்குமதியில் அந்த அளவுக்கு ஆர்வம் காட்டவில்லை. இதற்காக சென்ற வருடம் அமெரிக்கா, உலக வர்த்தக அமைப்பில் சீனாவின் மீது வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கில் அம்ரிக்கா வெற்றி பெற்றதன் விளைவாக, அதன் பிறகு அமெரிக்காவிலிருந்து முதல் முறையாக அரிசியை சீனா இறக்குமதி செய்யத் தொடங்கியது.
சீனா வழக்கமாக அரிசி வாங்கும் நாடுகளில் ஏற்றுமதி மிகவும் குறைக்கப்பட்டு விட்டதாலும் சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம், கொரானா வைரஸ் பரவல் காரணமாக உள்நாட்டு உற்பத்தி மிகவும் சரிந்ததாலும், கிட்டத்தட்ட அவர்களுக்கு ஒரு “உணவுப் நெருக்கடி” காலம் வந்து இருக்கலாம் என்ற ரீதியிலும் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து ஆகஸ்டு மாத்ததில் செய்தி வெளியிட்ட WION செய்திகள், சீன அதிபர் ஜி ஜிங்பிங் “ஆபரேஷன் காலி தட்டு” என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார் என்று கூறுகிறது. முதலில் 2013 இல் சீன அதிகாரிகள் நடத்தும் மிகப் பெரும் விருந்துகளை கட்டுப்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது தற்பொழுது பொதுமக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜிங்க்பிங், மக்களை உணவை வீணாக்காமல் தேவையான அளவு சாப்பிடுமாறு கூறினார். பெரும் வெள்ளத்தால் சீனாவின் பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. உணவுப் பொருட்களின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. சீனாவின் உணவு பாதுகாப்பு ஒரு நூலியிழையில் மட்டுமே தொங்கிக் கொண்டிருப்பதாக வியான் செய்திகள் குறிப்பிடுகிறது. சீனாவானது 1.4 பில்லியன் மக்களின் வீடாக உள்ளது. ஆனால் அது தற்சார்பு நிலையை அடையவில்லை. உணவு தானியங்களில் 20 முதல் 30 சதவிகிதம் தானியங்களை இறக்குமதி செய்கிறது. 2003 முதல் 2017 – வரை பத்து நாடுகளில் இருந்து மட்டும், சீனாவின் உணவு இறக்குமதி 14 பில்லியன் டாலரிலிருந்து 103 பில்லியன் டாலராக வளர்ந்தது.
கொரானா வைரஸ் பரவல் காரணமாக உலக விநியோக சங்கிலி நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே மக்களை குறைவாக சாப்பிடுங்கள் என்று சிக்கனம் செய்தாலும் பல விதங்களில் சீனாவில் ஒரு உணவு நெருக்கடி ஏற்பட்டு இருக்கலாம் என்றும் இதனாலேயே இந்திய-சீன மோதல் பதற்றத்திற்கு மத்தியிலும் இந்தியாவிடமிருந்து அரிசி வாங்கும் முடிவிற்கு சீனா தள்ளப்பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.