
புயல் “புரெவி” காரணமாக நாளை (வியாழக்கிழமை) வரை தென்தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடும் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட புயல் எச்சரிக்கை முன்னறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்: வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நகர்ந்து வரும் “புரெவி” புயல், மேற்கு – வடமேற்காக நகர்ந்து இன்று மாலை அல்லது இரவில் புயலாக மாறி, திரிகோணமலைக்கு வடக்கே இலங்கை கடலோரத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 80 லிருந்து 90 கிலோ மீட்டர் முதல், 100 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று மிக பலமாக வீசக்கூடும்.
அதன் பிறகு, மேற்கு – வடமேற்காக நகர்ந்து நாளை (டிசம்பர் 3-ஆம் தேதி) காலையில் கோமோரின் பகுதியை ஒட்டி மன்னார் வளைகுடா மற்றும் குமரிமுனை பகுதிக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 3-ஆம் தேதி மதியம் பாம்பனுக்கு மிக அருகாமையில் மணிக்கு 70 லிருந்து 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பின்பு, அது மேற்கு – தென்மேற்காக நகர்ந்து, தமிழக தென் கடலோரத்தில் கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையில் டிசம்பர் 4-ஆம் தேதி அதிகாலையில் புயலாகக் கடக்கும். அப்போது மணிக்கு 70 லிருந்து 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன் எச்சரிக்கைகள்: வானிலை ஆய்வு மைய முன்னறிவிப்புகள்: தென்தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு நாளை வரை மிக கனமழை! தென்தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் கனமானது முதல் மிக கனமானது வரையிலும், சில இடங்களில் மழை பெய்யக்கூடும்; டிசம்பர் 3 ஆம் தேதி தெற்கு கேரளாவில் (திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா பகுதிகளில்) இதே அளவு மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகத்தில் 2 மற்றும் 4 ஆம் தேதிகளிலும், தென் கேரளாவில் 3 மற்றும் 4 தேதிகளிலும் கனமானது முதல் மிக கனமானது வரையில் ஆங்காங்கே மழை பெய்யக் கூடும். வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, மாஹே & காரைக்கால், வடக்கு கேரளாவில் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் கனமானது முதல் மிக கனமானது வரையில் ஆங்காங்கே மழை பெய்யலாம். டிசம்பர் 4 ஆம் தேதி ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திராவில் ஆங்காங்கே கனமழை பெய்யலாம். 3 மற்றும் 4 தேதிகளில் லட்சத்தீவு பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும்.

வங்காள விரிகுடா மற்றும் இலங்கையின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் தென்மேற்குப் பகுதியில் கடும் சீற்றத்துடன், ராட்சத அலைகள் எழும். 3-ஆம் தேதி இரவு வரையில் அதே நிலை தொடர்ந்து, பிறகு படிப்படியாக சீராகும். இன்று குமரிமுனைப் பகுதி, மன்னார் வளைகுடா பகுதி, தமிழகம் – கேரளத்தின் தென்பகுதி, இலங்கையின் மேற்கு கடலோரப் பகுதியில் கடும் சீற்றம் இருக்கும். 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் கடும் சீற்றத்துடன் ராட்சத அலைகள் வீசும். லட்சத்தீவுகள் – மாலத்தீவு பகுதியிலும் அரபி கடலின் தென்கிழக்குப் பகுதியிலும் 3 முதல் 5 ஆம் தேதி வரையில் கடலில் கடும் சீற்றம் காணப்படும்.

கடலில் மீன்பிடிக்க செல்பவர்களுக்கு எச்சரிக்கை: இன்று முதல் 5-ஆம் தேதி வரையில் கீழே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் மீன்பிடிக்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. இன்றும், நாளையும் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதி, இலங்கை கடலோரத்தில் கிழக்குப் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இன்று முதல் 4-ஆம் தேதி வரையில் குமரிமுனை பகுதி, மன்னார் வளைகுடா, தமிழகம் – கேரள தெற்குப் பகுதி, இலங்கையின் மேற்கு கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. நாளை முதல் 5 ஆம் தேதி வரையில் லட்சத்தீவுகள் – மாலத்தீவு பகுதி மற்றும் அரபி கடலின் தென்கிழக்குப் பகுதிக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. புயல் நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்புடைய மாநில அரசுகளுக்கு இதுகுறித்து அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.