
விவசாயிகளின் லாபத்தை இரட்டிப்பாக்குவேன் என தேர்தல் வாக்குறுதி அளித்து அதிகாரத்தைப் பிடித்த பிரதமர் மோடி, அத்தகைய விவசாயிகளின் நியாயமானக் கோரிக்கைகளைப் பரிசீலிக்காது, ஜனநாயகப்பூர்வமான அவர்களது போராட்டங்களைக்கூட கொடுங்கரங்களின் மூலம் முடக்க முனைவது வன்மையானக் கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் “மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடிகள், டெல்லியை நோக்கிப் படையெடுத்து வருவதும், தங்களது உரிமைகளுக்காகத் தளராது போராடி வருவதுமான செய்திகள் பெரும் நம்பிக்கையைத் தருகின்றன. மண்ணுரிமைக்காகவும், தன்னுரிமைக்காகவும் போராடி வரும் அவ்விவசாயிகள் மீது அரசதிகாரத்தின் மூலம் ஏவப்படும் வன்முறை வெறியாட்டங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது.

வேளாண்மையை உள்நாட்டு, வெளிநாட்டுப் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் நோக்கோடு கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி நாடெங்கிலும் ஐநூறுக்கும் மேற்பட்ட உழவர் அமைப்புகள் கைகோர்த்துக் களமிறங்கி போராடி வருகின்றன. கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அப்போராட்டத்தில் பங்கேற்று அவர்களோடு இணைந்து வருகின்றனர்.
இது நாடு முழுமைக்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்போராட்டங்களைத் துளியும் பொருட்படுத்தாது பிரதமர் மோடி கள்ள மௌனம் சாதிப்பது வெட்கக்கேடானது. விவசாயிகளின் இலாபத்தை இரட்டிப்பாக்குவேன் என தேர்தல் வாக்குறுதி அளித்து அதிகாரத்தைப் பிடித்த பிரதமர் மோடி, அத்தகைய விவசாயிகளின் நியாயமானக் கோரிக்கையைப் பரிசீலிக்காது ஜனநாயகப்பூர்வமான அவர்களது போராட்டங்களைக்கூட கொடுங்கரங்களின் மூலம் முடக்க முனைவது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

இத்தகையக் கொடுங்கோல் போக்கு மன்னிக்கவே முடியாத வரலாற்றுப் பெருந்துரோகமாகும். வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், மண்ணுரிமைப் போராளிகள், அரசியல் கட்சிகள் மற்றும் நாடு முழுவதுமுள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் எனப் பல்வேறு துறைகளிலிருந்தும் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தவண்ணம் உள்ளது.
130 கோடி மக்களின் உணவுச்சந்தையை மொத்தமாக வணிகமாக்குவதற்கும், கார்ப்பரேட்டுகளின் வசதிக்காக அதனைத் திறந்து வைப்பதற்கும், உலக வர்த்தக அமைப்பின் எதேச்சதிகாரப்போக்கை நிலைநாட்டுவதற்கும் சட்டத்தின் வழியேயே சர்வ வல்லமையோடுகூடிய கொடுங்கோன்மையை ஏவுவது ஏற்கவே முடியாத அரசப்பயங்கரவாதமாகும். அதற்கெதிராகக் களமிறங்கியுள்ள விவசாயப் பெருங்குடி மக்களின் மகத்தான அறவழிப்போராட்டத்திற்குத் துணை நிற்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தலையாயக் கடமையாகும்.
ஆகவே, நாடு முழுமைக்கும் எழுந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கெதிரான விவசாயப்பெருங்குடி மக்களின் உணர்வலைகளைப் புரிந்துகொண்டு வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில் மக்கள் புரட்சி இந்தியப் பெருநிலம் முழுமைக்கும் வெடிப்பதை எவராலும் தடுத்திட முடியாது என எச்சரிக்கிறேன்” என அறிவித்துள்ளார்