இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் அமைச்சர் ஒருவரின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனின் சினிமா படப்பிடிப்புக்கு வனத்துறை அதிகாரிகள் தடை விதித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். அவர் தற்போது “ஷேர்னி” என்ற சினிமா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வித்யா பாலன் அங்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் சென்ற சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேச மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா, நடிகை வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு நடிகை வித்யாபாலன் மறுத்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் படப்பிடிப்புக்கு சென்ற வாகனங்களை பால்காட் வனத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இரண்டு வாகனங்கள் மட்டுமே வனப்பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் மற்ற படப்பிடிப்பு குழுவினரால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அமைச்சரின் இரவு விருந்துக்கு நடிகை வித்யா பாலன் போக மறுத்ததால் தான், அந்த கோபத்தில் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டதாக ஊடகங்களால் கூறப்படுகிறது. ஆனால், இதை மறுத்த வன அமைச்சர் விஜய் ஷா, “படப்பிடிப்புக்கு அனுமதி கேட்க என்னை அணுகினர். அவர்கள் தான் இரவு விருந்துக்கு என்னை அழைத்தனர். படப்பிடிப்பை நிறுத்த நான் உத்தரவிடவில்லை” என்று கூறியுள்ளார்.