
நிலம் அபகரிப்பு (நில மோசடி) குற்ற வழக்கில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனைக் கைது செய்யக்கூடாது என்ற உத்தரவை வரும் ஜனவரி 5-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்கத்தின் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முன்னாள் மத்திய அமைச்சர், தொழிலதிபர், அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன், சென்ற 1995-ஆம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் திரு ஜெகத்ரட்சகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் மற்றும் ஸ்ரீ நிஷா ஆகியோர் சென்ற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி சி.பி.சி.ஐ.டி காவல் அதிகாரிகளின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகினர்.

அதேபோல சென்ற 12-ஆம் தேதி சி.பி.சி.ஐ.டிகாவல் அதிகாரிகள், ஜெகத்ரட்சகன் மீதான நில மோசடி வழக்குத் தொடர்பாக சென்னை பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று ஆவணங்களை ஆராய்ந்தனர். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி காவல் அதிகாரிகள் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், அதுவரை வழக்கில் தொடர்புடைய திரு. ஜெகத்ரட்சகனைக் கைது செய்யக்கூடாது எனக் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சதீஷ் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சி.பி.சி.ஐ.டி காவல் அதிகாரிகள் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதம் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை ஜெகத்ரட்சகனைக் கைது செய்யக்கூடாது என ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கின் விசாரணை முடியும் வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் எனவும் காவல்துறைக்கு நீதிமனறம் அறிவுறுத்தியுள்ளது.